Title of the document

வந்தே மாதரம் பாடல் முதலில் எழுதப்பட்ட மொழி பெங்காலியா, சமஸ்கிருதமா என்ற கேள்விக்கு பெங்காலி என்ற சரியான விடைக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி புதுநகரைச் சேர்ந்த சுதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  எம்ஏ, எட் (தமிழ்) பட்டதாரியான நான், 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றேன். இதில், கட் ஆப் மதிப்பெண் 82 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் எனக்கு 81 மதிப்பெண்கள் கிடைத்தது.

தேர்வின் போது சமூக அறிவியல் பாடத்தில் 97வது கேள்வியில், ‘வந்தே மாதரம்’’ பாடல் முதலில் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது என கேட்கப்பட்டிருந்தது. இதற்கு ஏ) பெங்காலி, பி) மராத்தி, சி) உருது, டி) சமஸ்கிருதம் என 4 பதில்கள் இருந்தன. சரியான பதிலான ஏ) பெங்காலி என விடை அளித்தேன்.

ஆனால், டிஆர்பியால் வெளியிடப்பட்ட கீ ஆன்சரில் டி) சமஸ்கிருதம் என்பதே சரியான விடை என குறிப்பிட்டிருந்தனர்.  வந்தே மாதரம் பாடல் வங்கத்து கவிஞர் பக்கிம் சந்திர சாட்டர்ஜியால் முதலில் எழுதப்பட்டு பின்னர் தான் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன்மூலம் எனக்கு ஒரு மதிப்பெண் குறைந்துள்ளது.

அந்த மதிப்பெண் எனக்கு வழங்கப்பட்டிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணி கிடைத்திருக்கும். எனக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்கி, ஆசிரியர் பணி வழங்க வேண்டுமென மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்டு எனக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்கவும், பட்டதாரி ஆசிரியராக நியமிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

 இதேபோல், சிவகாமிசுந்தரி என்பவரும் ஒரு மனு செய்திருந்தார். மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘‘தேர்வு முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நியமன நடைமுறைகளும் முடிந்து விட்டது. அதே நேரம் மனுதாரர்கள் தகுதி இல்லையென கூற முடியாது. எனவே, அவர்கள் எழுதிய சரியான விடைக்கு கூடுதலாக 1 மதிப்பெண் வழங்கி, அதற்குரிய சான்றிதழ்களை டிஆர்பி வழங்க வேண்டும்.

2020க்குள் நியமன நடைமுறைகள் மேற்கொள்ளும்போது மனுதாரர்களுக்கு தகுதியின்படி பணி வழங்க பரிசீலிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post