Title of the document

குரூப் 2 பணிக்கான 1,338 இடத்துக்கு 4 லட்சத்து 62 ஆயிரத்து 697 பேர் எழுதிய முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு நடைபெற்ற 36 நாளில் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 23ம்  தேதி மெயின் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவியில் அடங்கிய தொழில் கூட்டுறவு அதிகாரி, சமூக பாதுகாப்பு துறை பயிற்சி அதிகாரி, வேலை வாய்ப்புத்துறை இளநிலை அதிகாரி, சிறைத்துறை பயிற்சி  அதிகாரி, தொழில்துறை உதவி ஆய்வாளர், சப்-ரிஜிஸ்டர்(கிரேடு 2), நகராட்சி ஆணையர்(கிரேடு 2), உதவி பிரிவு அதிகாரி(சட்டத்துறை), உதவி பிரிவு அதிகாரி(நிதித்துறை), தணிக்கை ஆய்வாளர்(இந்து சமய அறநிலையத்துறை),  கைத்தறி துறை இன்ஸ்பெக்டர், மூத்த ஆய்வாளர்(கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட 23 துறைகளில் காலியாக உள்ள 1,338 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான முதல் நிலை தேர்வை கடந்த மாதம் 11ம் தேதி நடத்தியது.

இத்தேர்வை எழுத 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 697 பேர் முதல் நிலை தேர்வை எழுதினர். இந்த நிலையில் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் நேற்று பிற்பகல்  டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டது.இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 2 தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி மிக விரைவாக முடிக்கப்பட்டு, வெறும் 36 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்திற்கும் முடிவுகளை  விரைந்து வெளியிட தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இனிவரும் காலங்களில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2 மாதங்களில் முதல் நிலைத்தேர்வும், 2 மாதங்களில் தேர்வு முடிவுகளும், 2 மாதங்களில்  முதன்மை எழுத்துத் தேர்வும், 3 மாதங்களில் எழுத்துத் தேர்வு முடிவுகளும், 15 நாட்களில் நேர்முகத் தேர்வும் நடத்தி, 10 மாதங்களுக்குள் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்,  தற்போது குரூப் 2 முதல் நிலை தேர்வின் முடிவு 36 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது. 69 நாட்கள் இடைவெளியில் பிப்ரவரி 23ம் தேதி முதன்மை எழுத்து(மெயின் தேர்வு) தேர்வு நடத்தப்பட உள்ளது.

முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட 15,194 விண்ணப்பதாரர்கள் தங்களது சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையம் மூலமாக வருகிற 24ம் தேதி  முதல் ஜனவரி 10ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர் வருகிற 24ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை இணையவழியே (www.tnpscexams.net)  மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும்.
சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத, விண்ணப்ப கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவர்கள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட  மாட்டார்கள். ஏற்கனவே வருகிற பிப்ரவரி 23ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளில் நிரப்பப்பட வேண்டிய நூலகர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வேறு ஒரு நாளில் நடத்தப்படும். இதற்கான  தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

2 Comments

Post a Comment

Previous Post Next Post