Title of the document

துப்புரவு பணியாளருக்கு சம்பளம் தராததால், பள்ளி கழிப்பறைகளை
சுத்தம் செய்யும்
தலைமை ஆசிரியர்
பெண் ஊழியருக்கு சம்பளம் தராததால், பள்ளி கழிப்பறைகளை, தலைமை ஆசிரியரே சுத்தம் செய்து வருகிறார். இந்த தகவல், 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பரவி, மாணவர்களையும், ஆசிரியர்களையும் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பள்ளியிலும், உள்ளாட்சி துறை வழியாக, கழிப்பறைகளை சுத்தம் செய்ய, தற்காலிக ஊழியர் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான சம்பளம், பள்ளி கல்வி துறையில் இருந்து, வட்டார வளர்ச்சி அதிகாரியான, பி.டி.ஓ.,க்கள் வழியாக வழங்கப்படுகிறது
இந்த திட்டத்தில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா, கல்குறிச்சியில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளியில், பாப்பா, 64, என்ற மூதாட்டி, துப்புரவு பணி செய்து வந்தார். இவருக்கு, மாதம், 2,250 ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. சில மாதங்கள் வரை சம்பளம் வழங்கிய, பி.டி.ஓ., அலுவலகம், திடீரென நிறுத்தி விட்டது
வாய் பேச முடியாத மகளையும், மூளை வளர்ச்சி குறைந்த மகனையும் வைத்துள்ள, அந்த பெண்ணால், சம்பளம் இன்றி, வாழ்க்கையை நகர்த்த முடியவில்லை. அதனால், அவர் பணியில் இருந்து நின்று விட்டார். இதையடுத்து, 250 மாணவ - மாணவியர் படிக்கும், அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள, ஆண், பெண் கழிப்பறைகளை, பள்ளி தலைமை ஆசிரியர், சேவியர் ஆரோக்கியதாஸ், சுத்தம் செய்கிறார்.
இது குறித்து, சேவியர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது: துப்புரவு செய்யும் மூதாட்டிக்கான சம்பளம், பள்ளி கல்வி துறையில் இருந்து, ஊரக வளர்ச்சி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், பி.டி.ஓ., அலுவலகத்தில், ஜூன் முதல் சம்பளம் வழங்கவில்லை. அதனால், அந்த பெண், வேலைக்கு வரவில்லை. இதையடுத்து, கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல், துர்நாற்றம் வீசியது.
ஆசிரியர்களையோ, மாணவ - மாணவியரையோ, துப்புரவு பணி செய்ய விட முடியாது. அவ்வாறு கூறினால், அது, வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, தினமும் நானே, இந்த பணியை செய்கிறேன். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு, துப்புரவு பணியாளருக்கு சம்பளம் கிடைக்கட்டும் என்ற, நல்ல நோக்கத்தில், புகைப்படத்தை வெளியிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post