Title of the document


நாகை, கஜா புயலின் சீரமைப்பு ஆய்வு பணியின் போது, ஆதரவற்ற மாணவியை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அழியா நினைவால் கண்கலங்கினார். தந்தையை பார்த்த மகிழ்ச்சியில் மாணவியின் கண்களில், தாரை தாரையாக கண்ணீர்கொட்டிய நெகிழ்ச்சியான தருணத்தில் அங்கிருந்த ஆசிரியர்களும் கண்கலங்கினர்.
 
நாகை மாவட்டத்தில், 2004ல், கோரதாண்டவம் ஆடிச் சென்ற சுனாமியின் இரண்டாவது நாளில் கீச்சாங்குப்பம் கடலோரத்தில், 2 வயது குழந்தையின் அழுகுரல் கேட்டமீனவர்கள், குழந்தையை மீட்டு, அப்போது கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். குழந்தையை அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்க உத்தரவிட்ட கலெக்டர், காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த, 150 குழந்தைகள் மீது, தனி கவனம் செலுத்தி வந்தார்.
கீச்சாங்குப்பம் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட, 2 வயது குழந்தைக்கு மீனா என்றும், வேளாங்கண்ணியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு சவுமியா என்று பெயர் சூட்டப்பட்டது. நாள்தோறும் வேலை பளுவுக்கு இடையிலும், ராதாகிருஷ்ணன் தன் குடும்பத்தினருடன் காப்பகத்தில் சில மணி நேரங்களை செலவழித்து வந்தார். இதனால், இத்தம்பதியை, அப்பா - அம்மா என்று காப்பக குழந்தைகள் அழைத்தனர்.
பதவி உயர்வில், ராதாகிருஷ்ணன் நாகையை விட்டு சென்றாலும், ஆண்டு தோறும் அன்னை சத்யா காப்பக குழந்தைகளை வந்து பார்த்து, செல்லாமல் இருந்ததில்லை. இந்நிலையில் காப்பகத்தில் இருந்த குழந்தைகள் வளர்ந்து திருமணமாகி சென்று விட்ட நிலையில், மீனாவும், சவுமியாவும் காப்பக பராமரிப்பில் உள்ளனர்.
 
நேற்று முன்தினம் நாகையில் கஜா புயல் சீரமைப்பு பணி ஆய்வில் இருந்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அரசு உதவிப் பெறும் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வரும் மீனாவை திடீரென்று சந்தித்தார். 2 வயதில் கண்டெடுக்கப்பட்டு, 17 வயது சிறுமியாக பள்ளி சீருடையில் இருந்த மீனா, அப்பா என்று சந்தோஷ குரலில், ஆனந்த கண்ணீருடன் ஓடிவரவும், தன் மகளை போல் அரவணைத்த அவர் தன்னை அறியாமல் கண் கலங்கினார்.
பின், நலம் விசாரித்த ராதாகிருஷ்ணனிடம், தான் பி.காம்., படிக்க விரும்புவதாக மீனா தெரிவித்தார்.நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி, மேல் படிப்பிற்கு தேவையான உதவிகள் செய்வதாக தெரிவித்தவர், தனியார் கல்லுாரியில், பி.ஏ.முதலாமாண்டு படிக்கும் சவுமியாவின் நலம் குறித்து, மீனாவிடம் கேட்டறிந்தார்.மற்றொரு நாளில் சவுமியாவை சந்திப்பதாக உறுதியளித்து, புறப்பட்டு சென்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post