ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் முறைகேடு: கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு


ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்றவர்களின் பட்டியல், அவர்கள் பணியாற்றிய காலம், பொது இடமாறுதலுக்கான விதிமுறைகள் ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
 மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:
 ஆசிரியர்கள் பொது இடமாறுதல் நிர்வாக காரணங்களுக்காக நடைபெற வேண்டும். இடமாறுதலுக்கான காரணம் அந்த ஆசிரியரின் பணி பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் 2018-19ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது கலந்தாய்வு விதிப்படி நடைபெறாமல், ஊழல் அடிப்படையில் நடைபெற்றுள்ளது. விதிகளை மீறி பல இடமாறுதல்கள் நடைபெற்றுள்ளன. இதனால் பிற மாவட்டங்களில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற இயலாமல், மன அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
 ஆனால் வெறும் 5 மாதங்கள் மட்டுமே பிற மாவட்டங்களில் பணியாற்றியவர்கள், லஞ்சம் கொடுத்து சொந்த மாவட்டங்களுக்கு இட மாறுதல் பெற்றுள்ளனர். பதவி உயர்வையும் லஞ்சம் கொடுத்து பெற்றுள்ளனர். வெளிப்படையின்றி, லஞ்ச அடிப்படையில் நடைபெற்றுள்ள இந்த ஆசிரியர் பொது இடமாறுதல், ஆசிரியர்களின் நலன்களை பாதிக்கும் வகையில் உள்ளது. லஞ்ச அடிப்படையில் நடைபெற்ற ஆசிரியர் இடமாறுதல் குறித்து நடவடிக்கை கோரி புகார் அளித்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பான அரசாணை எண் 403 அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். ஆசிரியர் பொது இடமாறுதலில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
 மனுவை விசாரித்த நீதிபதிகள், 2018-19ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்றவர்களின் பட்டியல், அவர்கள் பணியாற்றிய காலம், இடமாறுதலுக்காக கோரும் காரணம், ஆசிரியர் பொது இடமாறுதலுக்கான விதிமுறைகள் ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்