அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவால், ஆசிரியர் இல்லாமல் 3,894 உபரி பணியிடங்கள்!!

மாணவர் சேர்க்கை சரிவால், ஆசிரியர் இல்லாமல் 3,894 பணியிடங்கள், உபரியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, மாணவர் எண்ணிக்கை பொறுத்து, ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். கல்வித்துறை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கூடுதல் பணியிடங்கள் உருவாக்க கோரி, அதிக விண்ணப்பங்கள் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டன.ஆனால் இந்நிலை படிப்படியாக குறைந்து, உபரி ஆசிரியர்கள் பட்டியல், தற்போது பெறப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட பணியிடங்களுக்கு, போதிய மாணவர்கள் இல்லாததால், ஆசிரியர் இல்லாத பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இப்பணியிடங்களில் கணினி அறிவியல், கலைப்பாடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக ஆசிரியர் இல்லாத பணியிடங்களின் பட்டியல், சமீபத்தில் பெறப்பட்டது. இதில், அதிகபட்சமாக வேலுாரில் 465, திருவண்ணாமலையில் 439, விழுப்புரம் மாவட்டத்தில், 324 ஆசிரியர் இல்லாத பணியிடங்கள் உள்ளன.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில், 3,894 பணியிடங்களில், ஆசிரியர் இல்லாமல் உபரியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வித்துறை வசம் ஒப்படைக்கப்பட்ட இப்பணியிடங்களை, எக்காரணம் கொண்டும், காலியிடங்களின் பட்டியலில், சேர்க்க கூடாது என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.