
திருக்குறள்
அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்
திருக்குறள்:105
உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
விளக்கம்:
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.
பழமொழி
Time once lost is lost forever
கடந்த காலம் என்றும் மீளாது
இரண்டொழுக்க பண்புகள்
* பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.
* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.
பொன்மொழி
பிறருக்காக உழையுங்கள்; அதில் மகிழ்ச்சியின் இரகசியம் மறைந்திருக்கிறது. பிறர் உழைப்பைத் திருடாதீர்கள்; அதில் துன்பம் மறைந்திருக்கிறது.
- ரஸ்கின்
பொதுஅறிவு
1. இந்திய திரைப்படத் துறையில் தேசிய விருதுகளை அதிகபட்சமாக வென்றவர் யார்?
சத்யஜித்ரே
2. இயற்கணிதத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
அல் குவாரிஸ்மி
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
வெள்ளை பூசணி
1. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.
2. உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
English words and meaning
Kerosene. மண்ணெண்ணெய்
Knead. மாவு பிசைதல்
Kindred. உறவினர்
Kiln. சூளை, காளவாய்
Knot. முடிபோடு
அறிவியல் விந்தைகள்
அன்றாட பொருட்களும் அவற்றின் வேதிப் பெயர்களும்
1. மண் - சிலிக்கான் டை ஆக்சைடு
2. உப்பு - சோடியம் குளோரைடு
3. ஆப்பச் சோடா / சோடா உப்பு - சோடியம் பை கார்பனேட்
4. சாக்பீஸ் - கால்சியம் கார்பனேட்
5. சர்க்கரை - சுக்ரோஸ்
நீதிக்கதை
பஞ்சமி நாட்டின் மன்னர் பஞ்சோபகேசன். இவர் புதிதாக அமைத்த அழகிய தென்னந் தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை செய்தார். அப்போது அவனுக்கு, விவேகன் நினைவு வந்தது. அரசவை கோமாளியான அவன் அங்கும், இங்கும் சுற்றி வருகிறான். எந்த வேலையும் செய்வது இல்லை. அவனுக்கு இந்த வேலையை கொடுப்பது என்று முடிவு செய்தார்.
""இந்த நிலத்தில் தென்னங்கன்றுகள் நடப் போகிறோம். இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. இந்தக் கன்றுகளை இரவிலும், பகலிலும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக நடந்து கொள்,'' என்றார்.
""அரசே! நீங்கள் சொன்னது போலவே நடந்து கொள்வேன்,'' என்றான் விவேகன்.
அங்கே தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அவற்றிற்கு காவல் இருக்கத் தொடங்கினான் விவேகன்.
பகல் வேளையில், அவற்றைப் பார்த்துக் கொள்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இரவு வந்தது. வீடு செல்ல வேண்டும். தென்னங்கன்றுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தான். நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.
தென்னங்கன்றுகளை எல்லாம் பிடுங்கி, ஒன்றாகக் கட்டினான். அவற்றைத் தூக்கி கொண்டு, தன் வீட்டிற்கு வந்தான். தன் கண் பார்வையிலேயே அவற்றை வைத்திருந்தான்.
பொழுது விடிந்தது. அந்தக் கன்றுகளைத் தூக்கிக் கொண்டு நிலத்திற்கு வந்தான். முன்பு இருந்தது போலவே அவற்றை நட்டு வைத்தான். பொழுது சாய்ந்ததும் அவற்றைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, தன் வீட்டிற்குச் சென்றான். இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது.
ஒரு வாரம் சென்றது-
தென்னங்கன்றுகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அரசர் அங்கு வந்தார்.
தென்னங்கன்றுகள் அனைத்தும் வாடிக்கிடப்பதைப் பார்த்தார்.
கோபம் கொண்ட அவர், ""நீ பொறுப்பாகத் தென்னந்தோப்பைக் காவல் காப்பாய் என்று உன் பொறுப்பில் விட்டேன். எல்லாக் கன்றுகளும் வாடிக் கிடக்கின்றன. என்ன செய்தாய்?'' என்று கத்தினார்.
""அரசே! நீங்கள்தான் இவற்றைப் பகலிலும், இரவிலும் நான் காவல் காக்க வேண்டும் என்றீர்கள். இரவில் நான் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று பாதுகாத்தேன். பகலில் மீண்டும் இவற்றை இங்கே நட்டேன். நீங்கள் சொன்னது போலவே நடந்து கொண்டேன். இவை ஏன் வாடி விட்டன! என்று எனக்கும் தெரியவில்லை,'' என்றான்.
இதைக் கேட்ட அரசர், "இவனிடம் போய் இந்த வேலையை கொடுத்தோமே...' என்று தலையில் அடித்துக் கொண்டார்.
"அப்பாடா! தப்பித்தோம்!' என, பெருமூச்சு விட்டான் விவேகன்
கதை கருத்து: இதனை இவன் செய்வான் என்று அறிந்து அதனை அவன் கண் விட வேண்டும்.
இன்றைய செய்திகள்
27.11.18
* மாணவர்களின் புத்தகப் பை எடைக்கு புதிய வரம்பும், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் இல்லை என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
* அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பறைகளை ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
* கஜா புயலால் 31 லட்சம் தென்னை மரங்கள் அழிவு: நாற்றுகள் தயாரிக்க பண்ணைகள் அமைக்கப்படும்: வேளாண் பல்கலை. துணைவேந்தர் தகவல்.
* ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் ஆடம் ஸாம்பா வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.
* ஆஸ்திரேலியாவின் கேன்பராவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றுள்ளார்.
Post a Comment