விபத்தில்லா தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு 

விபத்தில்லா தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.நாடு முழுவதும் வரும் 6ம் தேதி தீபாவளி பண்டிகைகோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது வழக்கம். இதனால் கடந்த ஆண்டுகளில் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டது. சில இடங்களில் உயிரிழப்பும் அதிகளவு பொருட்சேதமும் ஏற்பட்டது. இதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், பள்ளி மாணவர்கள் விபத்தில்லாமல் தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீபாவளி நன்னாளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால் கவனமாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். விபத்து இல்லாமல் பட்டாசு வெடித்து, மகிழ்ச்சி நிறைந்த தீபாவளியை கொண்டாட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.பட்டாசுகளை கையில் வைத்து வெடிக்கக்கூடாது. மூடிய பெட்டிகளில், பாட்டில்களில் பட்டாசுகளை வைத்து வெடிக்கக்கூடாது. கூட்டமான பகுதிகள், குறுகிய தெருக்களில் வெடிக்கக்கூடாது. குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோர் பாதுகாப்பில் வெடிக்க வேண்டும். நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை அருகில் வெடிக்கக் கூடாது.மேலும், விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்க வேண்டும். தீ பாதுகாப்பு குறித்தும் அதிலிருந்து தப்பிப்பது குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment