பள்ளி ,அங்கன்வாடி , மருத்துவமனை, வீடு போன்றவைகளில், கழிப்பறைகள் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.முழு சுகாதாரம் அடைய, துாய்மை பாரத இயக்கத்தை, மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் சார்பாக, துாய்மை பாரத இயக்கத்தின் ஒரு பகுதியாக, நவம்பர் 19ல் கொண்டாடப்படும் 'உலக கழிப்பறை தினம்' காஞ்சிபுரம் அடுத்த வேளியூரில் கொண்டாடப்பட்டது.மாவட்ட ஆட்சியர் பொன்னையா பங்கேற்று, பல்வேறு சுகாதார பணிகளை துவக்கி வைத்தார். அதில் குறிப்பிடும் வகையில், சுகாதார இயக்கத்திற்காக, 'துாய்மை காஞ்சி' என்ற மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அப்ளிகேஷன் மூலம், கிராமப்புறங்களில் உள்ள சுகாதார ஊக்குவிப்பவர்கள், மாதம் இருமுறை நேரடியாக ஆய்வு செய்து, அதன் விபரங்களை இந்த அப்ளிகேஷனில் பதிவிடுவர்.ஒவ்வொரு வீடுகளிலும், தொடர்ந்து கழிப்பறை பயன்படுத்தப்படுகிறதா என, ஆய்வு செய்யப்பட்டு, பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வீடுகள் மட்டுமல்லாமல், அங்கன்வாடி மற்றும் பள்ளிகளும் இந்த அப்ளிகேஷனில் பதிவிடப்படும். சிறப்பான முறையில் கழிப்பறையை பயன்படுத்தும் அமைப்புகளுக்கு, ஜனவரி 26ல், குடியரசு தினத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
Post a Comment