புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், அரையாண்டு தேர்வை தள்ளி வைக்கும்படி, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதால், பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கஜா புயலால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு, கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். பல இடங்களில், பள்ளிகளின் மேற்கூரைகள் சரிந்துள்ளன; வகுப்பறை கட்டடங்கள் இடிந்துள்ளன.
சில பகுதிகளில், அரசின் நிவாரண முகாம்கள்,
அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் செயல்படுகின்றன. அதனால், இந்த மாவட்டங்களில், நவ., 15 முதல் 5 நாட்களாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பல ஊர்களில் மாணவ - மாணவியர் தங்களின் நோட்டு புத்தகம், புத்தக பை உள்ளிட்டவற்றை இழந்து விட்டதால்,பள்ளிக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது; பள்ளிகளை திறப்பதும் தாமதமாகிறது.
இந்நிலையில், டிசம்பர், 10ல், அரையாண்டு தேர்வு துவங்கும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்குள், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த, மாணவ - மாணவியர் புத்தகம், நோட்டுக்கள் பெற்று, தேர்வுக்கு தயாராக முடியுமா என்ற, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பெற்றோர் கூறியதாவது: ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வர வேண்டும். பள்ளிகளை திறந்து, குறுகிய காலத்தில், அரையாண்டு தேர்வுக்கான பாடங்களை நடத்த முடியாது. எனவே, அரையாண்டு தேர்வை,
இந்தாண்டுக்கு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, பள்ளி கல்வி உயர் அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அறிக்கை பெற உள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மாவட் டங்களுக்கு, அரையாண்டு தேர்வை,ஒரு மாதம் கழித்து நடத்தலாமா அல்லது தேர்வை ரத்து செய்யலாமா என, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, முடிவு செய் வர் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment