Title of the document


'நாராயணா... நாராயணா...!' என்றபடி குரல் கேட்ட திசை, ஆறுமுக கவுண்டனுார், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் ஏழாம் வகுப்பு.திருவிளையாடல் புராண கதையை, மீண்டும் கேட்போம் என நின்றன கால்கள். ஆனால், கதை துவங்கிய பிறகு தான் தெரிந்தது, அது விகிதமுறு எண்களை, எப்படி மாணவர்கள் புரிந்து கொள்வது என்பதற்கான, எளிய வழிமுறை என்பது.

கணித ஆசிரியை சத்யபிரபா தேவியின் இயக்கத்தில், மாணவர்கள் அற்புதமாக நடித்து காட்டினர்.'மாணவர்களுக்கு விகிதமுறு எண்களில் சந்தேகமாம்' என துவங்கிய நாரதர், எவையெல்லாம் விகிதமுறு எண்கள் என்ற, விவாதத்தை துவக்கி வைத்து, வழக்கம் போல் கலகத்துக்கு அடி போட்டார்.பிள்ளையார, வாதத்தை துவக்கி வைத்தார். 'ஒன்று, இரண்டு என தொடங்கி முடிவில்லாமல், செல்லும் இயல் எண்கள் தான் விகிதமுறு எண்கள்' என்றார்.

உடனே தம்பி முருகன், 'இல்லை அண்ணா... பூஜ்ஜியத்தில் துவங்கி முடிவில்லாமல் செல்லும் முழு எண்கள் தான்' என்றார்.சிவனின் வாகனம் நந்தி, இடையில் நின்று இருவரும் சொல்வது தவறு என்றது. 'குறைகளும், நிறைகளும் நிறைந்த வாழ்க்கை போல, குறை எண்களும், நிறை எண்களும் சேர்ந்த முழுக்கள் தான் விகிதமுறு எண்கள்' என முடித்து வைத்தது.மாணவர்கள் குழம்பியபடி நாடகத்தை பார்த்து கொண்டிருந்த போது, பார்வதி வந்தார். 'சிவன் இல்லையேல், சக்தி இல்லை; சக்தி இல்லையேல் சிவன் இல்லை. எனவே, பகுதியும், தொகுதியும் சேர்ந்தது தான் விகிதமுறு எண்கள்' என்றார். அப்போது சிவன், விவாத மேடைக்குள் தோன்றினார்.'

அனைத்து பரம்பொருட்களும் என்னுள் அடக்கம் என்பது போல், அனைத்து எண்களும், விகிதமுறு எண்களே; பின்னத்தில் மட்டும், பகுதி பூஜ்ஜியம் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உண்டு' என்றார்.'நாராயண...நாராயண...' சந்தேகம் தீர்ந்தது என கூறியபடி, அங்கிருந்து சென்றார் நாரதர். மாணவர்களின் கைத்தட்டலுடன் நாடகம் முடிந்தது.


'கணிதத்தை சுவைக்கலாம்'கணித ஆசிரியை சத்யபிரபாதேவி கூறுகையில்,''விகிதமுறு எண்களை மாணவர்கள் புரிந்து கொள்ள, இதிகாச கதைகள் மூலம் கற்பித்து வருகிறேன். இதேபோல், செவ்வகத்தின் சுற்றளவு, தலைகீழ் எண்களுக்கு மீன்பிடி பாடல், சமமான விகிதம் என, சில சிக்கலான கணிதப்பாடங்களை, இம்முறை வாயிலாக கற்பித்து வருகிறேன். கணிதம் கற்கண்டுதான். சரியான முறையில் கற்பித்தால் அதை இனிக்க செய்யலாம்,'' என்றார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post