அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சார்பில் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களை மேலே கொண்டு வந்து அனைத்து மாணவ, மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்ற ரோடு டூ ஸ்கூல் திட்டத்தின் கீழ் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 80 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 4200 மாணவ, மாணவிகளை தத்தெடுப்பதற்கான விழா சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வுத் திட்ட துணைத் தலைவர் டி.சசிக்குமார் பேசியது:
இந்திய கிராமங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் அதிக அளவில் இடைநிற்றலுக்கு ஆளாவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையை மாற்றும் நோக்கிலும், ஏழ்மையில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வியையும், வளமான எதிர்காலத்தையும் உறுதி செய்யும் நோக்கத்துடனும் அசோக் லேலண்ட் நிறுவனம் ரோடு டூ ஸ்கூல் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது பள்ளிகளுக்கு வழி அமைப்போம் என்ற பொருள்படும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது அரசுப் பள்ளிக் குழந்தைகளின் கல்வியியல் மற்றும் கல்வி சார்ந்த பிற நடவடிக்கைகள் என இரண்டிலுமே வளர்ச்சியை ஏற்படுத்த உதவும். உள்ளடங்கிய, அணுகுவதற்கு சிரமமான கிராமப்புறங்களில் இருந்து வரும் குழந்தைகளின் ஆரோக்கியம், சுகாதாரம், உடற்கல்வி, உளவியல் மேம்பாடு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தி அவற்றை மேம்படுத்துவது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
கடந்த 2015ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, தளி பகுதிகளில் 36 பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்தப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை அருகே உள்ள புழல், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் 102 பள்ளிகளில் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு வாகன ஓட்டுநர்கள் அதிகளவில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் 45 பள்ளிகளில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒசூர் பகுதியில் 102 பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 80 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 4200 மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பேசியது:
இத்திட்டம் சங்ககிரி பகுதியில் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தத் திட்டத்தை அரசு பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு வரும் ஆண்டில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை அதிகரித்து, இடைநிற்றலை குறைத்து சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.
இந்த விழாவில் கற்றல் தொடர்பு நிறுவனத்தின் தலைவர் நவுரியாஅன்சாரி, ஹிந்துஜா நிதி நிறுவன பிரிவின் முதன்மை அலுவலர் கிருத்திகா அஜய், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வி.செல்வராஜூ, பொருளாளர் என்.மோகன்குமார், இணைச் செயலர் எம்.சின்னதம்பி, சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் என்.ராமசாமி, பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் பி.மணி, தத்தெடுக்கும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment