
முப்பது ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வராததால் பாதிக்கப்பட்ட 88 வயது முன்னாள் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி மீதான குற்றச்சாட்டை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர் சுந்தரராஜன். இவர் சத்துணவுத் திட்டத்துக்கு வழங்கப்பட்ட பொருட்கள் இருப்பைச் சரிபார்க்காமல் இருந்ததாகக் கூறி, 1988இல் பணி ஓய்வு பெறுவதற்கு 10 மாதங்களுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
கடந்த முப்பது ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் முடிவுக்கு வராததால், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்ய கோரியும், ஓய்வு பெற அனுமதித்து, பண பலன்களையும், ஓய்வூதியத்தையும் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்ற வழக்கு நிலுவையில் இருந்ததால் ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, முப்பது ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வராததால் பாதிக்கப்பட்ட 88 வயதான சுந்தரராஜனுக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்து, அவருக்கு வழங்க வேண்டிய பண பலன்களையும், ஓய்வூதியத்தையும் ஆறு வாரங்களில் வழங்க உத்தரவிட்டார்.
மேலும், அரசு ஊழியர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை இதுபோல பல ஆண்டுகளாக முடிவுக்குக் கொண்டு வராமல் இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கை உதாரணமாகக்கொண்டு அரசு அதிகாரிகள் கண் திறக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Post a Comment