Title of the document


வெளிநாடுகளில் உள்ளது போன்று, நூல்களை வாசிக்கும் பழக்கத்தை அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தும் வகையில் 2,000 புத்தகங்களுடன் இந்தியாவிலேயே முதல்முறையாக திறந்தவெளி நூலகம் திருச்சியில் அமையவுள்ளது.
 புத்தகங்களை தேடிச் சென்ற காலம் மாறி, கையிலேயே நூலகம் என்ற அளவில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனாலும், நூலகத்துக்குச் சென்று புத்தகத்தை வாசிக்கும் திருப்தி இணையவழியில் இருப்பதில்லை.
 குறிப்பாக, இன்றைய இளைய சமுதாயம் முகநூல், கட்செவி, சுட்டுரை போன்ற சமூக வலைத்தளங்களிலேயே முழு கவனத்தை செலுத்தும் நிலை காணப்படுகிறது.
 எனவே, நூல்களை வாசிக்கும் பழக்கத்தை இளைஞர்களிடம் மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பினரிடமும் கொண்டு செல்லும் வகையில், புதிய திட்டத்தை செயல்படுத்துகிறது திருச்சி மாநகராட்சி. வெளிநாடுகளில் லிட்டில் ப்ரீ லைப்ரரி என்றழைக்கப்படும் திறந்தவெளி நூலகம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுபோன்ற நூலகத்தை திருச்சி மாநகரப் பகுதியில் அமைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.
 ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு: திருச்சி கோ.அபிஷேகபுரம் கோட்டத்துக்குள்பட்ட புத்தூர் ஆபீசர்ஸ் காலனி பகுதியில் திறந்தவெளி நூலகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்த மாநகராட்சி நிர்வாகம் இதற்காக ரூ.20 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 மழைக்காலத்தில் நூல்கள் நனையாத வகையில் மேற்கூரைகள் : நூல்கள் மழைக் காலங்களில் நனைந்துவிடக்கூடாது என்பதற்காக நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் மேற்கூரை அமைக்கப்படும். மேலும் நூலகத்தின் மையப்பகுதியில் இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. நூலகத்தைச் சுற்றிலும் வேலி அமைக்கப்படும். இதோடு நூலகம் அருகிலேயே வீதி பூங்கா எனப்படும் ஸ்டிரீட் கார்டனும், அதற்குள் இருக்கைகள் கொண்டும் அமைக்கப்பட உள்ளன.
 புத்தகம் வைத்து புத்தகம் எடுத்துச் செல்லலாம்: திருச்சி மாநகராட்சி சார்பில் 2,000 நூல்கள் வைக்கப்பட உள்ளன. இங்குள்ள புத்தகத்தை யார் வேண்டுமானாலும் விதிமுறைப்படி எடுத்துச் செல்லாம். ஆனால், அவர்கள் தங்களிடம் உள்ள ஏதேனும் ஒரு நூலை இங்கு வைத்த பின்னர் புதிய நூலை எடுத்துச் செல்ல முடியும்.
 கிவ் ஏ புக்- டேக் ஏ புக் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த நூலகத்தை ஏற்படுத்துகிறோம். சமூக வலைத்தளங்களிலேயே முழு கவனத்தையும் செலுத்தும் இளைஞர்கள் மத்தியில், நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்தான் இந்த திறந்தவெளி நூலகத்தை அமைக்கிறோம்.
 நிச்சயம் இந்த நூலகம் மாநகர மக்களுக்கும், இளைஞர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாகவே இருக்கும் என்கிறார் திருச்சி மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன்.
 இந்தியாவிலேயே முன்னோடி திட்டம் : இந்தியாவிலேயே முன்மாதிரியாக திறந்தவெளி நூலகம் அமைக்கும் பணியை திருச்சி மாநகராட்சி முன்னெடுத்துச் செயல்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உள்ள நூலகதத்தில் மாநகராட்சிப் பணியாளர் இருப்பர். மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் எப்போது வேண்டுமானலும் நூலகம் வரலாம்.
 புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் போது கண்டிப்பாக தங்களிடம் உள்ள பயனுள்ள நூலை இந்த திறந்தவெளி நூலகத்துக்கு அவர்கள் அளித்தாக வேண்டும் என்பதை அறிந்து நூலகத்துக்குச் சென்று தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம் என்றார்
 ரவிச்சந்திரன்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post