Title of the document
ஜாக்டோ-ஜியோ அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி 27ம் தேதி தொடங்கும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், சத்துணவுப்  பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தொடர்  வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். அரசு அலுவலகங்கள், பள்ளிகள் முடங்கின. இதனால் பாதிப்பு ஏற்பட்டதாக  தனிநபர் ஒருவர் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு மதுரை உயர் நீதிமன்றம் சார்பில் நீதிமன்ற ஆணை பிறப்பித்து, நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளில் ஒன்றான  7வது ஊதியக் குழுவில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளை அரசு வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து அரசும் அதை ஏற்றுக் கொண்டது.
ஆனால், இதுவரை அந்த பரிந்துரை வெளியிடப்படவில்லை. அதனால் மீண்டும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஒன்றன்பின் ஒன்றாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 
அதில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய வேண்டும், 7வது ஊதியக் குழுவில் அறிவிக்கப்பட்ட ஊதியத்தின்படி வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய  மாற்றத்தை சரி செய்ய வேண்டும், தொகுப்பு ஊதியம் மற்றும் மதிப்பு ஊதியம் ஆகியவற்றை ரத்து செய்து விட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசாணை 56 ஐ ரத்து செய்ய வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகள்  தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன.  இந்த போராட்டத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளப் ேபாவதில்லை என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பு அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், அக்டோபர் 4ம் தேதி  ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தியது. அதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய அரசு  உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் ஜாக்டோ-ஜியோ முடிவு செய்துள்ளது. 
இந்நிலையில், அடுத்தகட்ட போராட்டமாக தொடர் வேலை நிறுத்தம் செய்வது என்று தீர்மானித்துள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், அது தொடர்பான ஆயத்த மாநாட்டை கடந்த 13ம் தேதி சேலத்தில் நடத்தி முடித்துள்ளனர்.  அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, வரும் 27ம் தேதி ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி வரும் 27ம் தேதி இந்த  போராட்டம் தொடங்கும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.  இதற்கிடையே, இந்த போராட்டத்தை முறியடிக்க பல்வேறு முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post