கல்வி மேம்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
கும்பகோணத்துக்கு புதன்கிழமை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாமா சுப்பிரமணியன் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, திப்பிராஜபுரத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி பட்டம் பெற்ற 4 பேருக்கு விருது வழங்கி கெளரவித்த அவர், சுதந்திர போராட்ட வீரர் செண்பகராமன் பிள்ளையின் சிலையை திறந்து வைத்து பேசியதாவது:
காவிரி கரையில் இருக்கும் கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டத்தின் பிரதான வணிகப் பகுதியாக விளங்குகிறது. காந்திஜியின் கூற்றுக்கேற்ப, கிராமங்களில்தான் இந்தியப் பொருளாதாரம் உள்ளது.
இதையொட்டியே இந்திய அரசு, கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, தமிழக அரசும் கிராம முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தி வருகிறது.
என்னுடைய அனுபவத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகம் முன்னேற்றமடைந்துள்ளது.
குறிப்பாக, கல்வி, மின்வசதிகளை மேம்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. அனைவரும் தங்களது வீடு மட்டுமல்லாது, தெரு, கிராமத்தை சுத்தமாக
வைத்திருக்க வேண்டும் என்றார் அவர்.
இவ்விழாவில், தஞ்சாவூர் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, கும்பகோணம் உதவி ஆட்சியர் மா. பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார், தினமலர் ஆசிரியர் ராமசுப்பு, முன்னாள் எம்எல்ஏ ராம. ராமநாதன், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஸ்ரீதரன், தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ராஜகோபால், பாமா சுப்பிரமணியன் அறக்கட்டளையின் தலைவர் எஸ். கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழில் பேசிய ஆளுநர் :
ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனது பேச்சை ஆரம்பிக்கும்போது, அனைவருக்கும் காலை வணக்கம், செளக்கியமா?, நல்லது என்று ஆரம்பித்தார். பேச்சுக்கு இடையே தமிழ் இனிமையான மொழி என தமிழில் தமிழை வர்ணித்தார். நிறைவில் நன்றி வணக்கம் என்று கூறி பேச்சை நிறைவு செய்தார்.
Post a Comment