பெரியார் பல்கலைக்கழக புதிய பாடத்திட்டத்தில் குளறுபடி: புத்தகமே இல்லாததால் பேராசிரியர்கள் தவிப்பு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புத்தகமே இல்லாத தலைப்புகளின் கீழ், பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதால், இணைவு பெற்ற கல்லூரி பேராசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்  இளங்கலை மற்றும் முதுகலையில் ஒருசில படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, புத்தகங்களே இல்லாத தலைப்புகளின் கீழ் இப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது: கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன. வழக்கமாக, பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டவுடன், அதற்கான மூலநூல் மற்றும் பார்வை நூல்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும். ஆனால், குறிப்பிட்ட சில இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு, மூலநூல் மற்றும் பார்வை நூல்கள் குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
குறிப்பாக, முதுகலை ஆங்கில பிரிவிற்கு, புத்தகமே இல்லாத தலைப்புகளின் கீழ் கூட பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான, முதுகலை ஆங்கிலத்தில் இரண்டாம் ஆண்டுக்கு வரும் அனைத்து பாடத்திற்குமான பெரும்பாலான தலைப்புகள் எந்த புத்தகத்திலும் இடம்ெபறவில்லை.  இணையதளங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், மாணவர்களுக்கு எந்த தகவலை, எதன் அடிப்படையில் வழங்குவது என தெரியாமல் தவித்து வருகிறோம். இதேநிலைதான் மற்ற சில பாடங்களிலும் காணப்படுகிறது. இதுகுறித்து கேட்டால், உரிய பதிலும் கிடைப்பதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட பாடப்பகுதிகளுக்கு பல்கலைக்கழகம் தரப்பில் உரிய பாடநூல்களை வழங்க வேண்டும். மேலும், இனிவரும் காலங்களிலாவது  தயாரிப்பு குழுவினர் கலந்து ஆலோசித்து, மாணவர்களுக்கு ஏற்ற பகுதிகளை பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும். இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

0 Comments:

Post a Comment