Title of the document

பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைச் சேமிப்பது. நாம் அனைவரும் சம்பாதிக்கும் பணத்தைச் சேமிக்க விரும்பினாலும், நமது அன்றாட அலுவல்களுக்கு இடையே அதைச் செய்வது பெரிய மலைப்பான காரியமாக இருக்கிறது.  ஆனால், சற்று மெனக்கிட்டால் பணத்தைச் சேமிப்பது எளிதான விஷயம்தான்.
அந்த வகையில் சம்பாதிக்கும் பணத்தைச் சேமிப்பதற்கான 10 எளிய வழிகள் இங்கே...
1) செலவுகளை எழுதி வையுங்கள்
இது நமது பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து சொல்லப்படும் ஆலோசனைதான். ஆனாலும், பெரும்பாலானோர் அதைச் செய்வதில்லை. பணத்தைச் சேமிப்பதற்கான முதல் நடவடிக்கையே, நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை - அதாவது காபி குடிக்கும் செலவிலிருந்து வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது வரைக்குமான செலவுகளை - எழுதி வைப்பதுதான். அப்படிச் செலவழிப்பதை எழுதி வைக்கும் பழக்கம் வந்துவிட்டால், எந்தெந்த பொருள்களுக்கு  எவ்வளவு செலவாகிறது, எவையெல்லாம் தேவையற்ற செலவுகள் என்பதைக் கண்டறிந்து அநாவசிய செலவுகளைத் தவிர்க்க முடியும்.
2) பட்ஜெட் போடுங்கள்
ஒரு மாதத்துக்கு எவ்வளவு செலவுகிறது என்பது குறித்து உங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்து விட்டால், உங்களது செலவினங்கள் வருவாய்க்குள் இருக்கிறதா, சேமிக்க முடியுமா என்பதை முடிவு செய்ய இயலும். ஒருவேளை வருவாய்க்கு அதிகமான செலவுகள் இருந்தால், செலவுகளைக் குறைக்க  திட்டமிட முடியும். இல்லையெனில் வருவாயை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தாவது சிந்தித்து, அதைச் செயல்படுத்த முயலலாம்.
3) பணத்தைச் சேமிக்கத் திட்டமிடுங்கள்
நீங்கள் பட்ஜெட் போட்டுவிட்டாலே, அதில் சேமிப்பதற்கான பிரிவும் இடம் பெற்றுவிடும். உங்கள் வருவாயில் குறைந்தபட்சம் 15 முதல் 30 சதவிகிதமாவது சேமிக்க முயற்சி செய்யுங்கள்.  வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்குவது எவ்வளவு கட்டாயமாக உள்ளதோ, அதேபோன்று சேமிப்பையும் கட்டாயமாக்குங்கள்.
4) சேமிக்கச்  சிறந்த வழி இலக்கு
பணம் சேமிக்க வேண்டும். ஆனால், இந்த தேவைக்கு, இந்த காரியத்துக்கு எனச் சேமிப்பதற்கான தேவை என்ன என்பது குறித்த இலக்கை நிர்ணயித்துக் கொள்வதுதான் சேமிப்பதற்கான சிறந்த வழி. உதாரணமாக பிள்ளைகளின் படிப்புச் செலவு, மகளின் திருமணச் செலவு, வீடு கட்ட,  நகை வாங்க... என ஏதாவது ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்வது அவசியம். அப்படி இலக்கு நிர்ணயித்தால்தான், எவ்வளவு பணம் தேவை, அதைச் சேமிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.
உங்களது வருவாய் மற்றும் செலவுகளுக்குப் பின்னர், உங்களது அடுத்த இலக்கு, சேமிப்புக்கு எவ்வளவு ஒதுக்க முடியும் என்பதாகத்தான் இருக்கும். அவ்வாறு சேமிப்பதற்கான இலக்கில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்து, அதற்கு முன்னுரிமை கொடுங்கள். உதாரணமாக, சில மாதங்களில் கார் ஒன்றை வாங்க திட்டமிட்டிருந்தீர்கள் என்றால், ஓய்வுக்காலத்துக்காக சேமித்து வரும் தொகையை, அதற்காக ஒதுக்காதீர்கள். கார் வாங்குவதைக் காட்டிலும், ஓய்வுக்கால சேமிப்பு முக்கியம் என்பதால், அதற்கான சேமிப்பைத் தள்ளிப்போடாதீர்கள்.
சேமிப்புக்கு முன்னுரிமை
6) சேமிப்புக்குச் சரியான திட்டங்களைத் தேர்வு செய்யுங்கள்
உங்களது சேமிப்பு, குறுகிய கால இலக்காக இருந்தால், ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற திட்டங்களில் சேமியுங்கள். நீண்ட கால இலக்காக இருந்தால், கடன் பத்திரங்கள், பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள். அதே சமயம் இவற்றுக்கு வங்கி உத்தரவாதம் கிடையாது என்பதால், இதில் ரிஸ்க் உள்ளது என்பதையும் கவனத்தில் கொண்டு, ரிஸ் எடுக்க விருப்பமில்லை எனில் அதற்கேற்ற திட்டங்களில்  முதலீடு செய்யுங்கள்.
7) சேமிப்பை ஆட்டோமேஷன் செய்யுங்கள்
ஏறக்குறைய அனைத்து வங்கிகளுமே உங்களது சேமிப்பு கணக்கிலிருந்து தானாகவே மாதா மாதம், ஒரு குறிப்பிட்ட தேதியில் நீங்கள் சேமிக்கும் அல்லது முதலீடு செய்யும் திட்டத்துக்குப் பணம் சென்று சேருகிற இசிஎஸ் சேவைகளை அளிக்கின்றன. அதைப் பயன்படுத்தி , உங்கள் சேமிப்பை ஆட்டோமேஷன் ஆக்குங்கள்.
8) உங்கள் சேமிப்பு வளர்வதைக் கண்காணியுங்கள்
ஒவ்வொரு மாதமும் உங்கள் பட்ஜெட்டை ஆய்வு செய்து,  சேமிப்பு எந்த அளவுக்கு அதிகரிக்கிறது என்பதைத் தவறாமல் கண்காணித்து வாருங்கள். அப்படிச் செய்வது சேமிப்பதில் ஏதாவது பிரச்னை வந்தால், அதை உடனடியாகக் கண்டறிந்து, தீர்க்க உதவும். மேலும் இந்தப் பழக்கம் உங்களை நாளுக்கு நாள் இன்னும் அதிகமாகச் சேமிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தி, உங்கள் இலக்கை விரைவில் எட்ட உதவியாக அமையும்.
9) பி.எஃப் கணக்கை க்ளோஸ் செய்யாதீர்கள்
இன்றைய காலகட்டத்தில், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பணி மாறுவது என்பது இயல்பான ஒன்றாகிவிட்டது. அப்படிப் பணி மாறினாலும், பி.எஃப் எனப்படும்வருங்கால வைப்பு நிதி கணக்கை க்ளோஸ் செய்து, அந்தப் பணத்தை எடுத்து விடாமல், அந்தக் கணக்கை அப்படியே புதிதாக வேலைக்குச் சேரும் நிறுவனத்திலும் தொடருங்கள். அப்படிச் செய்வதன் மூலம், உங்கள் பணம் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யப்படுவதோடு மட்டுமல்லாது, அதற்கு அதிகமான வட்டியையும் பெற்றுத் தரும்.
10) வீட்டிலேயே இருப்பது சேமிக்க சிறந்த வழி
வார விடுமுறை நாள்களில் நம்மில் பெரும்பாலானோர் வெளியில் சென்று சாப்பிடுவது, தியேட்டர்களுக்குச் செல்வது, மால்களுக்குச் சென்று தேவையில்லாத பொருள்களைக் கூட வாங்கி, ஷாப்பிங் செய்வது எனப் பணத்தை வீணடிக்கிறார்கள். அப்படி அல்லாமல், வெளியில் செல்வதை மாதத்துக்கு ஒருமுறை என்ற கணக்கில் வேண்டுமானால் வைத்துக்கொண்டு, மற்ற வார விடுமுறை தினங்களில் வீட்டிலேயே இருந்து சமைத்து சாப்பிட்டு, குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி, தொலைக்காட்சிகளிலோ அல்லது இணையதளத்திலோ பிடித்தமான திரைப்படத்தையோ அல்லது நிகழ்ச்சியையோ கண்டுகளிப்பதினால், வெளியில் செல்வதால் ஏற்படும் போக்குவரத்துச் செலவுகளிலிருந்து இதர அநாவசிய செலவுகள் வரை தவிர்த்து பணத்தைச் சேமிக்க முடியும். இது எளிதான மற்றும் சாத்தியமான ஒன்றும் கூட.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post