கல்வியாண்டு (2019-20) முதல், அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் மாற்றி அமைக்கப்பட உள்ள புதிய சீருடைகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புதன்கிழமை சந்தித்த மாணவர்கள். உடன் பள்
தேசிய தூய்மைப் பள்ளி விருதுக்கான பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான சான்றிதழை முதல்வர் பழனிசாமியிடம் காண்பித்து பள்ளிக் கல்வித் துறையினர் வாழ்த்துப் பெற்றனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, 2014 -ஆம் ஆண்டு முதல் "தூய்மையான பாரதம், தூய்மையான பள்ளி' என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 2017-18 -ஆம் ஆண்டுக்கான தூய்மை பள்ளிக்கான தேசிய விருது வழங்கும் விழா அண்மையில் தில்லியில் நடந்தது. இந்த விழாவில் தேசிய அளவிலான தூய்மைப் பள்ளிக்கான விருதுக்கு தமிழகத்தில் சில பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
கரூர் மாவட்டம் தாந்தோணி டி.செல்லாண்டிப்பாளையம், தேனி மாவட்டம் மயிலாடும்பாறை வட்டத்திலுள்ள கொம்பைதொழு, சிவகங்கை மாவட்டம் எம்.ஆலம்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் அரியப்பாக்கம், திண்டுக்கல் மாவட்டம் இ.ஆவாரம்பட்டி, அரியலூர் சிலுவைசேரி ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தேசிய அளவிலான தூய்மைப் பள்ளிக்கான விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், தேசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான தூய்மைப் பள்ளி விருதுகள் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றதற்கான சான்றிதழும் அளிக்கப்பட்டது. இந்தச் சான்றிதழ்கள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் புதன்கிழமை காண்பிக்கப்பட்டன.
புதிய சீருடைகள்: வரும் கல்வியாண்டில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு புதிய வண்ணச் சீருடைகள் மாற்றியமைக்கப்பட உள்ளன. இந்தப் புதிய சீருடைகளை அணிந்து வந்த அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்.
பணி நியமன உத்தரவு: பள்ளிக் கல்வித் துறையில் பணிக்காலத்தில் இறந்த 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன உத்தரவுகளை வழங்கிடும் அடையாளமாக, ஏழு பேருக்கு நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
Post a Comment