Title of the document

திண்டுக்கல் மாவட்டத்தில், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் அதிகாரம் முதல் முறையாக அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த சில தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மாநில அணித் தேர்வுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இம்மாவட்டத்தில் குறுவட்டம் முதல் கல்வி மாவட்டம் வரை நடைபெறும் போட்டிகளில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆதிக்கமே இருந்து வந்தது. இப்போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிடமே கல்வித்துறை அலுவலர்கள் வழங்கி வந்தனர்.
இதனால் அப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் தேர்வு செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. மேலும் குறிப்பிட்ட சில உடற்கல்வி ஆசிரியர்களே தொடர்ந்து நடுவராக இருந்து, அவர்கள் சார்ந்த பள்ளி மாணவர்களை தேர்வு செய்வதிலும், போட்டிக்கான இடத்தை தேர்வு செய்வதிலும் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான போட்டிகளை அரசுப் பள்ளிகள் மட்டுமே ஏற்று நடத்த வேண்டும் என அப்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் கோபிதாஸ் உத்தரவிட்டார். அதன்படி, நிகழாண்டுக்கான குறுவட்டப் போட்டிகள் நத்தம் மற்றும் ஒட்டன்சத்திரம் அரசுப் பள்ளிகள் சார்பில் நடத்தப்பட்டன. அடுத்தக் கட்டமாக கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளும், அரசுப் பள்ளிகள் சார்பிலேயே நடைபெறவுள்ளன.
இதனால், தனியார் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களால் அதிக அளவில் வெற்றி பெற முடியவில்லை. அதே நேரத்தில் குறுவட்டப் போட்டிகளைக் கடந்து, கல்வி மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள சில தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், மாநில அளவிலான அணித் தேர்வுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிகளுக்கு தமிழக அணிக்கான மாணவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி மாநில பெண்கள் ஹேண்ட் பால் அணிக்கான தேர்வு திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் வெள்ளிக்கிழமை (அக். 5) நடைபெறவுள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட தனியார் பள்ளி வளாகத்தில் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில உடற்கல்வி ஆசிரியர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போட்டி நடத்துவதற்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், உடனடியாக இடமாற்றம் செய்வதிலும், அதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மாணவிகளுக்கு அறிவிப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வியாளர் கழகத்தின் மாநில தலைவர் எஸ்.ஆரோக்கியசாமி கூறியதாவது: தனியார் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் போட்டிகளை நடத்தும்போது, அதில் ஏற்படும் தவறுகளுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது. அரசுப் பள்ளி சார்பில் போட்டிகள் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாத சிலரின் தூண்டுதலால் போட்டிக்கான இடம் அடிக்கடி மாற்றப்படுகிறது. திண்டுக்கல் பிரதான சாலையிலுள்ள ஒரு உதவிப் பெறும் பள்ளியில் நடைபெற வேண்டிய சதுரங்கப் போட்டிகள், சிலரின் தூண்டுதலால் நேருஜி நகரவைப் பள்ளிக்கு மாற்றப்பட்டது. அதேபோல் தற்போதும், சின்னாளப்பட்டி பள்ளியிலிருந்து மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது. ஒருசிலரின் தூண்டுதலுக்கு கல்வி அலுவலர்கள் அடி பணியக் கூடாது என்றார்.
அலைக்கழிக்கப்படும் பெண் அலுவலர்: மாநில அணித் தேர்வில் பங்கேற்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு முடியும் வரை செல்லிடப்பேசிகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்ட மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜதிலகம், சிபாரிசுகளுக்கு இடமளிக்காமல் தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார். அதேபோல் மாநில தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின், உடற்கல்வி ஆசிரியர்களை தேர்வுக் குழுவிலிருந்து நீக்கியுள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த உடற்கல்வி ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்களுக்கு உடற்கல்வி ஆய்வாளர் குறித்து தொடர்ந்து புகார் அளித்து வருவதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக, உடற் கல்வி ஆய்வாளர் அலுவலகத்திலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் காலிப் பணியிடத்துக்கு 3 மாதங்களுக்கு மேலாக ஊழியர் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post