கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் மாகாணப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் பேசும் போது, பிளஸ் 1 வகுப்புக்குரிய பாடங்களை கட்டாயம் நடத்த வேண்டும். குறிப்பிட்ட அளவுக்கு மாணவர்கள் அதில் மதிப்பெண் பெற வேண்டும். இல்லை என்றால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் மேனிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் தலா 600 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. இரண்டு தேர்வுகளுக்கும் ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் பொதுத் தேர்வு வைப்பதால் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை நீக்கும் வகையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தனித்தனி மதிப்பெண் பட்டியல்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியல்கள் தனித்தனியாக வழங்கினாலும், கற்றல் கற்பித்தலில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பாடங்கள் முழுமையாக கற்பிக்கப்படுவதில்லை என புகார்கள் வந்துள்ளது. அதனால் மாணவர்கள் திறன் பாதிக்கப்படும் என்பதால், பிளஸ் 1 வகுப்பின் அனைத்து பாடங்களும் நடத்தப்பட வேண்டும். அந்த பாடங்கள் முழுமையாக கற்பிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Post a Comment