Title of the document

அஸ்ஸாமில் பள்ளிக்குச் செல்லவேண்டி தினமும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர் மாணவர்கள்.
அசாம் மாநிலம் பிஸ்வாநாத் மாவட்டம் சூட்  கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளி ஆற்றங்கரைக்கு அப்பால் அமைந்துள்ளது. இதனால், பள்ளிக்குச் செல்லும் சிறுவர் சிறுமியர், ஆற்றைக் கடந்தே செல்லவேண்டிய சூழல் உள்ளது. சரியான சாலை வசதியோ, படகு வசதியோ இல்லாத நிலையில், தினமும் அலுமினியப் பாத்திரங்களைக்கொண்டு ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் அவல நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 
ஆபத்து என்று அறிந்தும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவே, பெரிய அளவிலான அலுமினியப் பாத்திரத்தைக் கொண்டு, அதன் உள்ளே அமர்ந்து தோணி போன்று தங்கள் பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர். முறையான பாலம் அமைக்கப்படாததால், குழந்தைகள் இத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுவருகிறார்கள். அலுமினியப் பாத்திரத்தின் உதவியுடன் குழந்தைகள் ஆற்றைக் கடந்துசெல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது. 


இதுகுறித்து பள்ளி ஆசிரியர் ஜே.தாஸ் விவரிக்கையில்,``பள்ளி அமைந்துள்ள பகுதியில் ஆற்றங்கரை உள்ளது. ஆனால், ஆற்றைக் கடப்பதற்கு பாலம் கட்டவில்லை. அதனால், பள்ளிக்கு வரும் குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆற்றைக் கடந்து பள்ளிக்கு வரவேண்டி, அலுமினிய பாத்திரங்கள் உதவியுடன் குழந்தைகள் ஆற்றைக் கடந்துவருகின்றனர். இதற்கு முன்னர், வாழை மரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட தற்காலிகப் படகுகளைப் பயன்படுத்தினர். குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக அரசு பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினார். 


இந்த விவகாரம் தொடர்பாக பிஸ்வநாத் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., பிரமோத் போர்தகுர் கூறுகையில், ``குழந்தைகள் ஆற்றைக் கடந்துசெல்லும் காட்சியைப் பார்க்கையில் வெட்கமாக உள்ளது. இந்தப் பகுதியில் முறையான சாலை வசதிகூட அமைக்கவில்லை. ஒரு தீவில் எப்படி பள்ளியை அரசாங்கம் கட்டியது என்பது தெரியவில்லை. ஆற்றை மாணவர்கள் கடந்துசெல்ல நிச்சயம் படகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். அதோடு, பள்ளியை வேறு இடத்துக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.  

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post