Title of the document



தேசிய நல்லாசிரியர் விருதுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் செவ்வாய்க்கிழமை கெளரவிக்கவுள்ளார்.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான, செப்டம்பர் 5-ஆம் தேதி, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, தில்லியில் புதன்கிழமை நடைபெறும் விழாவில் கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கவுள்ளார். இந்த விருதைப் பெறுவோரில், கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ஆர்.சதியும் ஒருவர்.






இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: புதிய விதிகளின்படி, கல்வித் துறையில் புதுமையான முறையில் பங்காற்றி, பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பெருமை சேர்த்த ஆசிரியர்கள், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பு ஆண்டுக்கு 300-க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு அந்த விருது வழங்கப்பட்டு வந்தது. அந்த விருதின் முக்கியத்துவம் கருதி, தற்போது ஆண்டுக்கு 45 ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்காக, 6,692 பேர் விண்ணப்பித்திருந்தனர். பல கட்ட பரிசீலனைக்குப் பிறகு 152 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 45 ஆசிரியர்களை தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நடுவர் குழு தேர்ந்தெடுத்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post