Title of the document

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தொழிற்கல்வி ஆசிரியர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தில், 50 சதவீத தொகை ஓய்வூதிய கணக்கில் சேர்க்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1978 -79-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, தொழிற்கல்வி, பொதுக்கல்வி என இரண்டு விதமான கல்வி முறை அமலானது. தொழிற்கல்விக்கு, பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் 2002-ஆம் ஆண்டு வரை படிப்படியாக காலமுறை ஊதியத்தில் பணி வரன்முறை செய்யப்பட்டனர். இந்தநிலையில் தொகுப்பூதிய காலம் ஓய்வூதியத்திற்கு கணக்கிடப்படாது என, அரசு அறிவித்துஇருந்தது.
இதுகுறித்து தொழிற்கல்வி ஆசிரியர்கள் தரப்பில், நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தொகுப்பூதியத்தில் 50 சதவீத தொகை, ஓய்வூதிய கணக்கில் எடுத்துக் கொள்ள பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள அரசாணையில் தொழிற்கல்வி ஆசிரியர்களாக, 2003-ஆம் ஆண்டு ஏப்.1-ஆம் தேதிக்கு முன் பணி வரன்முறை செய்யப்பட்டவர்களில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு அவர்களின் பணிக் காலத்தில் 50 சதவீத தொகை, ஓய்வூதிய கணக்கில் சேர்க்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொழிற்கல்வி ஆசிரியர்கள் வரவேற்பு: இது தொடர்பாக தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கு தொடர்ந்த அனைவரும் பயன் பெறும் வகையில் ஆணையிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இந்த அரசாணையால் நீதிமன்றத்தில் வழக்கு தொடராதவர்கள் பயன் பெற இயலாத நிலை உள்ளது. அனைவரும் நீதிமன்றம் சென்றால்தான் கிடைக்கும் என்ற நிலையினை மாற்றி தகுதியுள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டுகிறோம் என அதில் கூறியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post