Title of the document



தஞ்சாவூர் அருகே உள்ள பூதலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக பணி புரிபவர்கள் பாலமுருகன்,ஜெயபாலன் மேலும் அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் ராமமூர்த்தி. இவர்கள் மூவரும் இணைந்து பள்ளி வேலை முடிந்த பிறகு மாலையிலும் பள்ளி விடுமுறை நாட்களிலும் பூதலுார், திருகாட்டுப்பள்ளி பகுதிகளில் சுற்றியுள்ள ஏரி, குளங்களின் கரைகளில் பனை விதைகளை விதைத்து வருகிறார்கள். மேலும், பனை மரம் மற்றும் பனை விதைப்பு பற்றி மாணவர்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருவதோடு அவர்களையும் இதில் ஈடுபடுத்தி வருகிறார்கள். இதுவரை 40 ஆயிரம் பனை விதைகள் விதைத்து அசத்தியுள்ளனர். அத்துடன் பாரம்பரிய மரக்கன்றுகளையும் தயார் செய்து வளர்த்து, அனைவருக்கும் இலவசமாக வழங்கி வருகிறார்கள். `மாணவர்களோடு சேர்த்து மரங்களையும் உருவாக்குகிறோம்’ என மகிழ்ச்சி பொங்க கூறி பெருமைகொள்ள வைக்கிறார்கள் இந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

ஆசிரியர் பாலமுருகனிடம் பேசினோம். ``இந்தியாவில் உள்ள பனை மரங்களில் 67 சதவிகிதம் தமிழகத்தில்தான் இருந்துள்ளது. இதனால் தமிழக அரசு பனை மரத்தை அரசு மரமாகவும் அறிவித்தது. பனை மரத்தின் வேர்கள் மழை நீரை உறிஞ்சி சேமிக்கும் தன்மையுடையவை. மேலும், மண் அரிப்பையும் தடுக்கும் திறன் கொண்டவை. இத்தகைய சிறப்புமிக்க பனை மரங்களின் எண்ணிக்கை காலப்போக்கில் குறையத் தொடங்கியது. நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்துச் சென்ற பெரிய சொத்தான பனை மரத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். பனை மரத்தை அழிவில் இருந்து காக்கவும், அதனை பெருக்கவும் ஆசிரியர்களான நாங்கள் 3 பேரும் சேர்ந்து சுமார் ஆறு வருடத்திற்கு மேலாக பனை விதைகளை விதைத்து வருகிறோம். இந்த பணியை நாங்கள் தொடங்கிய போது எல்லோரும் எங்களை ஏளனமாக பார்த்தார்கள். அதோடு, `சாக்பீஸ் பிடிக்க வேண்டியவர்கள், கையில் மண்வெட்டியைப் பிடித்துக் கொண்டு சுற்றுகின்றனர்’ என்று கிண்டல் செய்தனர். ஆனால், நாங்கள் அதைக் காதில் வாங்கி கொள்ளாமல் பனை விதைகளை விதைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தோம்.

எங்க பகுதியைச் சுற்றியுள்ள கள்ளப்பெரம்பூர் ஏரி, ஆனந்த காவிரி வாய்க்கால் கரையோரம், பூதலுார், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு செல்லும் சாலையோரம், குளத்தின் கரைகள் என எல்லா பொது இடங்களிலும் பனை விதைகளை விதைத்தோம். எங்களின் உழைப்பையும் பின்வாங்காத முயற்சியையும் பார்த்து, கிண்டல் செய்தவர்களின் எண்ணங்கள் மாறியதோடு எங்களை ஊக்கபடுத்தவும் தொடங்கினர் காலப்போக்கில் அவர்கள் எங்களோடு இணைந்து உதவி செய்யவும் ஆரம்பித்தனர்.







இதுவரை அனைவரும் ஒத்துழைப்போடு நாங்கள் 40 ஆயிரம் பனை விதைகள் விதைத்திருக்கிறோம். அதோடு மட்டும் இல்லாமல் இதை வருங்கால சமூகத்திற்கு எடுத்து செல்லும் வகையில் மாணவர்களிடையே பனையின் சிறப்பு பற்றி எடுத்து கூறி ஊக்கப்படுத்தி வருவதோடு விதைகள் விதைப்பில் அவர்களையும் ஈடுபடுத்தி வருகிறோம். பணி சம்பந்தமாக வெளியூர் சென்றாலும், சொந்த வேலையாகச் சென்றாலும் எங்களிடம் எப்போதும் பனை விதைகள் கையில் இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் விதைகளை விதைப்போம். மேலும் வீட்டில் பாரம்பரிய மர விதைகளை வாங்கி பதியமிட்டு மரகன்றுகளை உருவாக்கி அதை அனைவருக்கும் இலவசமாகக் கொடுத்து வருகிறோம். அரசம், வில்வம், புங்கை, வேம்பு, வாதம் மடக்கி, ஆலம், கருக்கொன்றை போன்ற பாரம்பரிய மரக்கன்றுகள் கொடுத்து, அதன் சிறப்புகளையும் எடுத்து கூறுவோம். எங்க ஊரைச் சுற்றி விதைச்சாச்சு.

இப்ப மாணவர்களோட நாங்க எல்லாம் சேர்ந்து எங்க பள்ளி வளாகத்தில் விதைத்து வருகிறோம். இதை சக ஆசிரியர்கள் தொடங்கி, துறை சார்ந்தவர்கள் அனைவரும் ஊக்கபடுத்துறதுதான் எங்களுக்கான மகிழ்ச்சி. மண்ணுக்கானவர்கள் மனிதர்கள் மட்டும் இல்லை; மரங்களும்தான். அதனாலேயே மாணவர்களோடு சேர்த்து மரங்களையும் உருவாக்குகிறோம்’’ என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post