மூடப்படும் அரசுப் பள்ளிகள்: கல்விக்கு உதவ இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் புதிய முயற்சி


குறைந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையின் காரணமாக தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும் சூழலில், கல்விக்கு உதவ இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்  புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

எல்லோருக்கும் வணக்கம். கல்வி என்பது ஒரு அடிப்படைத் தேவை. அது எல்லாருக்கும் இலவசமாக கிடைக்கணும். ஆனா தமிழ்நாட்டில் நிறைய அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளது. அது தொடர்பாக நாம உடனடியா நடவடிக்கை எடுக்கணும். இல்லன்னா ஏற்கனவே கல்விங்கிறது வியாபாரமா ஆகிட்ட  சூழ்நிலையில், இன்னும் அஞ்சு வருசத்துல ஏழைகளுக்கு இலவசக் கல்வி என்பது மூடப்படும் ஆகிடும்.

உலக அளவில் சாதிச்ச பல தமிழர்கள் அரச பள்ளிகளில் படிச்சவங்கதான். இப்ப தமிழ்நாட்டிலே கிராமப்பகுதிகளில் 890 அரசுப் பள்ளிகள் மூடும் நிலையில் இருக்கு. நகர்ப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இதை மாத்துவதற்கான எனது ஒரு சிறிய முயற்சியாக சென்னையில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. சொல்லித் தரும் ஒரு ஆசிரியரின் சம்பளத்தை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். என்னை இதைச் செய்யுமாறு வித்திட்ட நண்பர்களுக்கு நன்றி,

இந்த சமயத்துல என்னுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள், குறிப்பாக அயல் நாட்டில் வசிக்கிற தமிழ்  சொந்தங்கள் இதுக்கு உதவனும்னு கேட்டுக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.