தமிழகத்திற்கு 8 விஸ்வகர்மா தேசிய விருதுகள்
தமிழகத்தில் உள்ள பெல் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஏழு விருதுகளும், சேலம் எஃகு தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஒரு விருதும் என எட்டு விஸ்வகர்மா விருதுகளை மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் திங்கள்கிழமை வழங்கினார். 
2016-ஆம் ஆண்டில் சிறந்த வகையிலான செயல்பாடுகளுக்காக 28 விஸ்வகர்மா தேசிய விருதுகள் 139 பேருக்கும், 128 பேருக்கு தேசிய பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழா மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் சார்பில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் விருதுகளை வழங்கினார். 
இதில் திருச்சியில் உள்ள பாரத மிகு மின் நிறுவனத்தின் (பெல்) முதலாவது பிரிவைச் சேர்ந்த ஊழியர்களான கிரேன் ஆப்பரேட்டர் எஸ்.சுந்தரராஜன், டர்னர் எம். பத்மநாபன் ஆகியோர் முதல் விருதைப் பெற்றனர். இதேபோன்று, மேலும் 6 விருதுகளை இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 24 பேர் பெற்றனர். 
இதேபோன்று, சேலம் எஃகு தொழிற்சாலையைச் சேர்ந்த பி.சோமந்தரம், டி.முருகேசன் உள்பட 6 பேர் இந்த விருது பெற்றனர். 
இதுதவிர, தெலங்கானா, உத்தராகண்ட் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மத்திய அரசின் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 
பணியிடங்களில் உற்பத்தி திறனை பெருக்குவது, பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஆகிய பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. 
இதேபோன்று, தொழிலகங்களிலும், கட்டுமான இடங்களிலும், துறைமுகங்களிலும் சிறந்த பாதுகாப்பு செயல்பாடுகளுக்காக திருச்சி பெல் நிறுவனம் உள்பட 128 அரசு, தனியார் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

0 Comments:

Post a Comment