Title of the document



திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களை அழைத்து வர இலவச வேன் வசதி செய்யப்பட்டிருப்பது பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கத் தயக்கம் காட்டுவது வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், தற்போது அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரை கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லை. இதனைத் தீர்க்கப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்திலுள்ள பாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இதற்கு உதாரணமாக அமைந்துள்ளது. குளத்துப்பாளையம், பாரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 247 மாணவ, மாணவியர் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலானவர்கள் நடந்தே பள்ளிக்கு வருவது வழக்கம். அவர்களின் வருகையை ஊக்குவிக்கும் பொருட்டு, நேற்று (ஜூலை 10) முதல் இலவச வேன் வசதி தொடங்கப்பட்டது.

பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பேஸ்புக் நண்பர்கள், இப்பள்ளியின் தலைமையாசிரியர் அகிலா மற்றும் ஆசிரியர்கள் உட்படப் பலரது முயற்சியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான மாத வாடகையை இவர்களே செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இலவச வேன் வசதி தொடக்கவிழாவில் ஊத்துக்குளி வட்டாரக் கல்வி அதிகாரி வசந்தி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post