Title of the document



கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் படிக்கும்
அரசுப் பள்ளி மாணவர்கள் பஸ்வசதி இல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிடக்கூடாது என்பதற்காக ஆசிரியர் ஒருவர் சொந்த செலவில் பேருந்து வாங்கி, அதில் டிரைவராகவும் இருந்து சேவை செய்துவருகிறார்.
காலையில் கிராமங்களில் இருந்து பேருந்தில் அழைத்து வருவதும், மாலையில் கிராமங்களில் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தும் இந்த ஆசிரியர் சேவையாற்றி வருகிறார்.


x
உடுப்பி மாவட்டம், பிரம்மாவர் தாலுகாவில் பராலி கிராமம் உள்ளது. இங்கு பராலி அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ராஜா ராம். இவர்தான் உடற்கல்வி ஆசிரியராகவும், கணிதம், அறிவியல் பாட ஆசிரியராகவும், பஸ் ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த உயர்நிலைப்பள்ளிக்கு வரும் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் வருவதற்கு போதுமான பேருந்து வசதி இல்லை என்பதால், ஒவ்வொரு  ஆண்டும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. ஏறக்குறைய ஒவ்வொரு கிராமத்திலும் இருந்து இந்த பள்ளிக்கு வந்து மாணவர்கள் படிக்க சராசரியாக 5 கி.மீ முதல் 10 கி.மீ வரைபயணிக்க வேண்டும். ஆனால், சாலை வசதி இல்லாததால், பேருந்து போக்குவரத்தும் முடக்கப்பட்டது.
இதனால், பாதுகாப்பின்றி பள்ளிக்கு அனுப்ப முடியாது எனக்கூறிப் பெற்றோர் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தத் தொடங்கினார்கள். இதனால், பள்ளியில் நாளுக்கு நாள் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து 60 ஆக சரிந்தது.
இதையடுத்து, இந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜா ராம் பள்ளிக்கு மாணவர்கள் வருகை குறைந்து வருவதற்கு முக்கியக் காரணமே, பேருந்து வசதி இல்லாததுதான். பஸ் வசதி செய்துகொடுத்தால், மாணவர்கள் வரவாய்பு உண்டு என எண்ணினார்.
இதையடுத்து, இந்தப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இருவர் பெங்களூரில் பெரிய நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். அவர்களிடமும், முன்னாள் மாணவர்கள் சங்கத்திடமும், தன்னிடம் இருக்கும் பணத்தையும் முதலீடாக வைத்து பள்ளிக்கு மினி பேருந்து ஒன்றை ராஜாராம் விலைக்கு வாங்கினார்.
மாணவர்களை அழைத்துவர பேருந்துவாங்கிவிட்டது, ஓட்டுநருக்கு எங்கே செல்வது.  வேலைக்கு யாரையாவது அமர்த்தினால், மாதந்தோறும் ரூ.7 ஆயிரம்வரை ஊதியம் அளிக்க வேண்டும். ஆனால், ராஜாராம் வாங்கும் ஊதியத்தில் அதைப் பிரித்துக்கொடுக்க இயலாது. ஆதலால், தானே ஓட்டுநர் உரிமத்தைப் பெற்று, மாணவர்களைக் கிராமங்களில் இருந்து அழைத்துவரும் ஓட்டுர் பொறுப்பை ராஜா ராம் ஏற்றார்.
பள்ளிக்கூடத்துக்கு அருகே வசிக்கும் ராஜா ராம் காலையில் 8 மணிக்குப் பேருந்தை எடுத்துக்கொண்டு மாணவர்களை அழைக்கச் செல்லும் ராஜாராம் 9.30 மணிக்குள்ளாக 4 முறை சென்று மாணவர்களைக் கிராமங்களில் இருந்து அழைத்து வந்து விடுகிறார்.
இப்போது பள்ளிக்குச் செல்ல இலவசமாகப் பேருந்து வசதி கிடைத்தவுடன் பெற்றோர் பிள்ளைகளை நம்பிக்கையாகப் பள்ளிக்கு அனுப்ப முன்வந்தனர். 60 மாணவர்களாகக் குறைந்திருந்த நிலையில், இப்போது 90 மாணவர்கள் வரை மீண்டும் வருகை தரத் தொடங்கிவிட்டனர்.
இது குறித்து பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜா ராம் பெங்களூரில் இருந்துவெளிவரும் ஒரு பெங்களூரு மிரர் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் ராஜா ராம்
பேருந்து வசதி இல்லாத காரணத்தால்தான் மாணவர்கள் பள்ளிக்கு வரமுடியவில்லை என்பதை அறிந்தேன். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தையும், குறிப்பாக விஜய் ஹெக்டே, கணேஷ் ஷெட்டி ஆகிய இருமாணவர்களையும் தொடர்பு கொண்டு உதவிகேட்டேன். அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில் பள்ளிக்கு மாணவர்களை அழைத்துவர புதிய மினி பேருந்து வாங்கினோம். இந்த பேருந்தை பராமரிப்பது, ஓட்டுவதற்கு ஆள் தேவைப்பட்டது.
ஆனால், நான் வாங்கும் ஊதியத்தில் ஓட்டுநர் வைத்துக்கொள்ள முடியாது என்பதால், நானே ஓட்டுநராக மாறினேன். மாணவர்களைப் பாதுகாப்பாக வீட்டில் இருந்து அழைத்து வருவதும், திரும்பக் கொண்டுவந்து சேர்ப்பதையும் வழக்கமாக்கினேன்.
பேருந்து வசதி இல்லாத காரணத்தால், பள்ளியில் இருந்து ஆண்டுக்கு 10 மாணவர்கள் வரை நின்றனர். இதனால், 60 ஆக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், பேருந்து வசதி கிடைத்தவுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கி 90-க்கு மேல் அதிகரித்தது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப்பள்ளிகள் போட்டிபோடுவது என்பது கடினமானதுதான். ஆனால், 60 மாணவர்களுக்கும் குறைவாக ச் செல்லும் போது தலைமை ஆசிரியர் பதவி பறிக்கப்படும்.ஆதலால், இந்த முடிவு எடுத்தோம்.
வீட்டில் இருந்து காலை 8 மணிக்கு பஸ்ஸை எடுத்துப் புறப்படும் நான், 9.20 மணிக்குள் 4 முறை மாணவர்களைக் கிராமத்தில் இருந்து அழைத்து வந்துவிடுவேன். ஏறக்குறையக் காலையில் 30 கி.மீ, மாலையில் 30.கி.மீ பயணிக்கிறேன். பெரும்பாலான மாணவர்கள் சாலை வசதி இல்லாத கிராமத்தில்தான் வசிக்கிறார்கள்.
பேருந்துக்கான  டீசல், பராமரிப்பு செலவு அனைத்தையும் என்னுடைய ஊதியத்தில் இருந்துதான் செலவு செய்கிறேன். முன்னாள் மாணவர்கள் சங்கமும் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு ராஜா ராம் தெரிவித்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியை குஷ்மா கறுகையில் “ இந்த பள்ளியில் மொத்தம் 4 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் ஆசிரியர் ராஜா ராம் அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடியவர். அறிவியல் கணிதம் பாடங்களையும் நடத்தி வருகிறார். 2-வது ஆண்டாக ஆசிரியராகவும், பஸ் ஓட்டுநராகவும் ராஜாராம் செயல்பட்டு வருகிறார்” எனத் தெரிவித்தார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post