நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்த வலியுறுத்துவோம்: அமைச்சர் கே.செங்கோட்டையன்நீட்தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிலிருந்து உதவிக் கல்வி அலுவலர் வரை ஆய்வுக் கூட்டம் கோவை, பீளமேட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் ஜூலை 12-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையின் பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறவும், ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்வதற்கும், ஒவ்வொரு பள்ளியையும் ஆய்வு செய்யும் வகையிலும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர்.
பள்ளிக் கல்வித் துறையின் சிறப்புத் திட்ட ஆய்வு மதுரை, திருச்சி, சென்னையிலும் நடைபெற உள்ளது.
அரசுப் பள்ளியில் படிக்கும் 20 ஆயிரம் மாணவர்களுக்கு 500 பட்டயக் கணக்காளர்களைக் கொண்டு சி ஏ படிப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்படும். முதல்கட்டமாக ஈரோட்டில் 2,700 மாணவர்களுக்கு வழங்கப்படும்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு படித்தவுடன் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 12 திறன் பயிற்சிகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும். இந்தியா முழுவதும் 8 லட்சம் மாணவர்கள் பொறியியல் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்துடன் பிளஸ் 2- விலேயே திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை விஞ்சும் வகையில் தமிழகத்தில் புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கப்படும்.
நீட் தேர்வுக்காக 412 மையங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி நாள்களில் ஒரு மணி நேரம் மற்றும் விடுமுறை நாள்களில் மூன்று மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு என்பது குறித்து மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு இன்னும் முறையாக கடிதம் வரவில்லை. அவ்வாறு கடிதம் வந்தால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்த தமிழக அரசு வலியுறுத்தும். வரும் ஜூலை 15-ஆம் தேதியில் இருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாள்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படும்.
தமிழகத்தில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 100 மேல்நிலைப் பள்ளிகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து திங்கள்கிழமை (ஜூலை 9) ஆணை வெளியிடப்படும். கண் பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும் என்றார்