பயன்பாட்டுக்கு வராமலே இடிந்து காணப்படும் பள்ளிக் கட்டடம் - கலெக்டர் ஆய்வில் அதிர்ச்சி!


  நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆத்துக்குடி
கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.


   இங்கு புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் திறக்கப்படாத நிலையில் மழையில் கரைந்தும், சுவர் இடிந்தும் அபாயகரமான நிலையில் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயின்று வரும் இப்பள்ளியில் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு கடந்த 2016-2017 நிதியாண்டில் புதிய கட்டடத்தைக் கட்டினார்கள்.


  ஊரக வளர்ச்சி நிதி ரூ.10 லட்சம் மற்றும் மயிலாடுதுறை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது.தற்போது, கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது.


  புதிய கட்டடம் இன்னும் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படவில்  இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த மழையில் கட்டடத்தின் வெளிப்புற சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து அதனுள் இருந்த கம்பிகள் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதனைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் வெறும் கையால் தட்டினாலே சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துவிழுந்தன.


   தரைப்பகுதி ஓங்கி மிதித்தாலே சிமென்ட் பெயர்ந்து உள்வாங்கிக்கொள்கிறது.


  இதனால் பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவே தயக்கம் காட்டுகின்றனர்.  இந்நிலையில், நாகை கலெக்டர் சுரேஷ்குமார் ஆத்துக்குடி பள்ளியின் புதிய கட்டடப் பணி களை ஆய்வு செய்தார்.

   இதுபற்றி அவரிடம் பேசியபோது, ``பள்ளியின் புதிய கட்டடம் தரமான முறையில் கட்டப்படவில்லை என்று புகார் வந்ததையடுத்து நேரில் ஆய்வு செய்தேன்.


  கட்டுமான பணிகள், பேஸ்மட்டம், பில்லர்கள் நன்றாக உள்ளதாகப் பொறியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், சிமென்ட் பூச்சுகள் தரமாக இல்லை என்கிறார்கள். இக்கட்டடத்தில் உள்ள குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்.

  கட்டுமானப் பணியைத் தரமாகச் செய்யாத ஒப்பந்தக்காரர், அதைக் கண்காணிக்க தவறிய அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.