கனவு ஆசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு கிராம பொதுமக்கள் பாராட்டு விழாஅரசின் பரிசுத் தொகை ரூ.10000 ஐ பள்ளிக்கு நன்கொடையாகக் கொடுத்த தலைமையாசிரியர்பெற்றோர்களுக்கு தொலைபேசி வழியாக குரல் வழிச் செய்தி வசதி அறிமுகம்.மாதனூர் ஒன்றியம், பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் சேகர் அவர்களுக்கு சமீபத்தில் தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. அதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பள்ளிகுப்பம் கிராம பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடத்தினர். கிராமத்தின் தர்மகர்த்தா பெரியசாமி தலைமை தாங்கினார். கேசவன், கோபி, கருணாகரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதனூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாதேஷ், திருப்பதி, சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். பொதுமக்களின் சார்பில் தலைமையாசிரியர் சேகருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் ரேவதி, நளினசங்கரி, கேசலட்சுமி, ஷர்மிளா, கோமதி ஆகியோரை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியரின் பெற்றோர்கள் மற்றும் மனைவிக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இந்த விருது பள்ளிகுப்பம் கிராமத்திற்கு கிடைத்த பெருமை என்று பலரும் குறிப்பிட்டனர். இந்த பள்ளிகுப்பம் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பினால் தான் கிடைத்ததாகவும், எனவே இந்த விருதை பள்ளியின் ஆசிரியர்களுக்கும், பள்ளிகுப்பம் கிராமத்திற்கும் அர்ப்பணிப்பதாகவும் அறிவித்த தலைமையாசிரியர் சேகர் தனக்கு விருதுடன் வழங்கப்பட்ட ரூ.10,000 தொகையை பள்ளி முன்னேற்றத்திற்காக பொதுமக்கள் முன்னிலையில் பள்ளிக்கே நன்கொடையாக கொடுத்தார். பள்ளியின் ஆசிரியர்கள் தலைமையாசிரியருக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர். மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தொலைபேசி வாயிலாக குரல் வழி செய்தி (VOICE MESSAGE) வசதி பரிசோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் தினந்தோறும் பெற்றோர்களுக்கு தொலைபேசி அழைப்பு மூலம் பள்ளி மற்றும் மாணவர்கள் பற்றிய செய்திகள் குரல் வழி செய்தியாக தெரிவிக்கப்படும்.  பொதுமக்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் திரளானோர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். பள்ளியின் குட்டி மாணவர்கள் தலைமையாசிரியருக்கு சந்தனமாலை, பொன்னாடை போர்த்தி பயணப் பையை பரிசாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். தலைமையாசிரியர்கள் ரவிச்சந்திரன், யுவராஜ், தட்சணாமூர்த்தி, மகேஸ்வரி, ஞானசெல்வி, கிருஷ்ணமூர்த்தி, பானுமதி, செல்வி, புஷ்பம், சேகர், யூதா ஆசீர்வாதம் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாராட்டு விழா நடத்திய பொதுமக்களை பெரிதும் பாராட்டினர். திரளான பொது மக்கள் கலந்துகொண்டனர். வேலூர் மாவட்டத்தில் கனவு ஆசிரியர் விருது பெற்ற சரவணன், அருண்குமார் கலந்து கொண்டனர். மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

கல்விச்சிறகுகள் ஆசிரியர் திரு. சேகர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறது