19 புதிய அறிவிப்புகள் வெளியீடு: அமைச்சர் வளர்மதி...!!


19 புதிய அறிவிப்புகள் வெளியீடு: அமைச்சர் வளர்மதி
கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களின் நலனுக்காகத் திட்டங்கள் உட்பட 19 புதிய அறிவிப்புகள் சட்டசபையில் நேற்று (ஜூலை 2) வெளியிடப்பட்டுள்ளன.


நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி புதிய நலத் திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், ஜெருசேலம் புனித பயணம் மேற்கொள்ள அரசு உதவி பெறுபவர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு 500இல் இருந்து 600ஆக உயர்த்தப்படும் எனவும், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கான ஆண்டு நிர்வாக மானியம் 30 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.

மேலும், கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களின் நலனுக்காக 2 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் 5 கல்லூரி விடுதிகள் புதிதாக துவக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இம்மாணவர்களின் நலனுக்கான திட்டங்கள் உட்பட 19 புதிய அறிவிப்புகளை நேற்று அமைச்சர் வளர்மதி வெளியிட்டார்.