Title of the document

சமூக நீதிக்கு எதிரானது எனக் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகியுள்ள நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலையுண்டு உயிரிழந்துவரும் நிலையில், புதிய பாடப்புத்தகங்களில் மருத்துவம் கிடைக்காவிட்டால் வேறு என்ன படிப்பு வாய்ப்புகள் உள்ளன எனும் விவரங்கள் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

  ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் பல்வேறு பாடத்திட்ட முறைகள் ஒழிக்கப்பட்டு, சமச்சீர் பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அதையடுத்து தமிழகப் பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்துவது எனும் பெயரில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நடப்புக் கல்வியாண்டில் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி உருவாக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுவருகின்றன. 11-ம் வகுப்புப் பாடப்புத்தகங்கள் மட்டும் இன்னும் முழுமையாக அச்சடிக்கப்படாததால்,பள்ளிகளுக்கும் வழங்கப்படவில்லை. பாடநூல் கழகத்தின் மூலமான விற்பனைக்கும் வரவில்லை. குறிப்பாக, தமிழ்வழியிலான பாடப்புத்தகங்கள் முழுமையாக அச்சடித்து முடிக்கப்படவில்லை.

இந்தக் குறை ஒருபுறம் இருந்தாலும்,புதிய பாடப்புத்தகங்களில் உள்ள பல்வேறு புதிய, நல்ல அம்சங்கள் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்புக்கு உள்ளாகியுள்ளது. மாநில அரசின் ஒப்புதலின்றியும் எதிர்ப்பை மீறியும் கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வால்,தமிழகத்தில் இதுவரை மேல்நிலைப் படிப்பை நன்றாக முடித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைத்துவந்த நிலைமை பறிபோயுள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகள் கடினமாகப் படித்தும் மருத்துவப் படிப்பு கிடைக்காததால் மனமுடைந்த மாணவர்கள் தங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ளும் துயரத்தையும் தமிழகம் சந்தித்துவருகிறது.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்துவரும் நிலையில், அதை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்திலும் மாணவர்கள் உள்ளனர். அதன்படி மருத்துவப் படிப்பு கிடைக்காமல்போகும் நிலை ஏற்பட்டால், என்னென்ன மாற்றுப்படிப்புகளில் சேரமுடியும் என்பது குறித்த விவரங்கள் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு புத்தகங்களில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இது குறித்த விவரங்கள் உள்ளன. 11-ம் வகுப்பு கணிதம்,இயற்பியல், வேதியியல், உயிரியல்,தாவரவியல், விலங்கியல் புத்தகங்களில் மாற்றுப் படிப்புகளைப் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

மேல்நிலை முதலாம் ஆண்டிலேயே இளநிலைப் பட்டப் படிப்புகளைப் பற்றிய அறிமுகமும் விளக்கமும் தரப்படுவதால், மாணவர்களுக்கு அது பற்றிய தூண்டல் ஏற்படுவது இயல்பு. இத்துடன் ஆசிரியர்களும் உரிய விளக்கங்களை அளிக்கும்போது அடுத்தகட்டம் பற்றிய திட்டமிடலை மாணவர்கள் உருவாக்கிக்கொள்ள முடியும்.

உதாரணமாக, இயற்பியல் புத்தகத்தில், என்னென்ன நுழைவுத்தேர்வுகளை எழுதமுடியும்?என்னென்ன இயற்பியல் படிப்புகள் இருக்கின்றன? அதை முடித்தபிறகு என்னென்ன முதுநிலைப் பட்டப் படிப்புகள் உள்ளன ஆகிய விவரங்கள் என மூன்று நிரல்களாகத் தரப்பட்டுள்ளன. மேலும், இயற்பியல் பட்டம் முடித்தால் அரசுத் துறையில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன? அரசு உதவித்தொகை வழங்கப்படும் உயர், ஆய்வுப் படிப்புகள் என்னென்ன ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன.

முதுநிலைப் பட்டம் முடித்த பின்னர்,அணு இயற்பியல், பேரண்டம்,கருந்துகள் ஆராய்ச்சி, நானோ நுட்பவியல், படிகவியல், மருத்துவ இயற்பியல் உட்பட ஆராய்ச்சி செய்யக்கூடிய 18 துறைகள், இந்திய அளவில் செயல்பட்டுவரும் 30 அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் பற்றியும் தகவல்கள் இடப்பட்டுள்ளன.

இதைப்போலவே, வேதியியல்,தாவரவியல், விலங்கியல் துறைகள் தொடர்பாக, என்னென்ன இளநிலை,முதுநிலைப் பட்டப்படிப்புகள்,ஆராய்ச்சிகள், வேலைவாய்ப்புகள் என்பன குறித்த விவரங்களும் குறைந்தது மூன்று பக்கங்களுக்கு விரிவாக அளிக்கப்பட்டுள்ளன.

இவற்றைப் படிக்கும் மாணவர் யாராக இருந்தாலும் இந்த விவரங்களைப் பற்றி அறிந்துகொள்ளாமல் இருக்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. ஆனாலும் புத்தகத்தோடு புத்தகமாக விட்டுவிடாமல் இதைப் பற்றி மாணவர்களுக்கு நேரம் எடுத்து விளக்கம் அளிக்கும்வகையில்,ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை மையம் அமைத்தால் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பற்றி அறியச்செய்வதில் முழுப் பயனும் கிடைக்கும் என்கிறார்கள்,கல்வியியல் செயற்பாட்டாளர்கள்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post