மருத்துவ கல்லூரி இல்லாத இடங்களில் பட்டயப் படிப்பு துவங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவ கல்லூரி இல்லாத இடங்களில் பட்டயப் படிப்பு துவங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் முதுநிலை பட்டயப்படிப்பு (பிஜி டிப்ளமோ) தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை  கூட்டம் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு அவை கூடியதும் முன்னாள் எம்எல்ஏ-க்கள் செ.மாதவன், கே.கே.ஜி.முத்தையா, சா.கணேசன், பி.அப்பாவு, ஆர்.சாமி, ஜெ.குரு என்கிற குருநாதன், பூபதி மாரியப்பன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் வேண்டும் என பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சேகர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு ரூ. 2,20,00,000  செலவில் முதன்மை சிகிச்சை பிரிவும்,  ரூ.1,20,00,000 செலவில் அறுவை சிகிச்சை பிரிவும்,  12 லட்சம் செலவில் இளம் சிசு பராமரிப்பு மையமும் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும் அதற்கான கட்டுமான பணிகள் விரைவாக நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  தேவைக்கேற்ப புதிய கட்டிங்களும்  கட்டித்தரப்படும் என்று விளக்கமளித்தார். இதுதவிர பட்டுக்கோட்டை, கடலூர், கோவில்பட்டி போன்ற பகுதிகளில் மருத்துவக்கல்லூரி இல்லாத மருத்துவமனைகளில் பி.ஜி.கோர்ஸ் என சொல்லக்கூடிய முதுநிலை பட்டயப்படிப்புகள் தொடங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும் அவை விரைவில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்தார்

0 Comments:

Post a Comment