Title of the document
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய கோரி உண்ணாவிரதம் இருந்த 2500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். 2009ம் ஆண்டு தகுதி தேர்வு எழுதி அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி குடும்பத்துடன் காலவரையற்ற உயிர் துறக்கும் உண்ணாவிரத போராட்டம் டிபிஐ வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. அவர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட பிறகு ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு வைக்கப்பட்டது. 2009ம் ஆண்டு 26000 பேர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 18 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
அவர்களுக்கு தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. 
அவர்களின், 7-வது ஊதியக்குழு படி ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்று கூறி 2500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இன்று காலை டிபிஐ வளாகத்தில் உயிர் துறக்கும் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை 2500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் காலை 8 மணிக்கே டிபிஐ வளாகத்தில் குவிந்தனர். இதை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் காலை 8.30 மணி அளவில் தொடங்கியது. 9 மணி அளவில் போலீசார் அங்கு வந்து அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். இதுகுறித்து இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் ராபர்ட், ரெக்ஸ் ஆனந்தகுமார், கண்ணன் ஆகியார் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த 2009ல் தகுதி தேர்வு எழுதி 18000 பேர் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டோம்.
அதாவது 01.06.2009க்கு முன் பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 01.06.2009க்கு பிறகு பணியில் சேர்ந்த எங்களுக்கு ரூ.5200 அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பளம் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை ஊதியமாக இருக்கிறது.இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஒரே கல்வி தகுதி இருந்தும் ஒரே பணியாக இருந்தும் அந்த 01.06.2009க்கு பிறகு பணியில் சேர்ந்த எங்களுக்கு ஊதியம் குறைத்து வழங்குவது நியாயமல்ல. இந்த ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று கடந்த 9 ஆண்டுகளாக பல தொடர் போராட்டங்களை நடத்தி வந்தோம். 2016ல் பிப்ரவரி மாதம் 8 நாட்கள் உயிர் துறக்கும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். 
அப்போது எங்களை அழைத்து பேசிய தொடக்கல்வி இயக்குனர் 7-வது ஊதிய குழுவில் எங்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று எழுத்துப்பூர்வமான உத்தரவாதக் கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தை கல்வி அமைச்சரிடம் அப்போது கொடுத்து நிறைவேற்றக் கோரினோம். ஆனால் இன்று வரை அதை நிறைவேற்றவில்லை. ஒரு நாள் இடைவெளியில் பணியில் சேர்ந்த எங்களுக்கு ரூ.14,800 அடிப்படை ஊதியத்தில் குறைகிறது.
இந்த வேறுபாட்டை களைய சொல்லி தான் தொடர்ந்து 56 மாதங்களாக கேட்டு வருகிறோம். சட்டப் போராட்டமும் நடந்து வந்திருக்கிறது. ஆனால் அரசு இந்த ஊதிய முரண்பாட்டை களையவில்லை. அதனால் இந்த ஊதிய முரண்பாட்டை களைந்து அரசாணை வெளியிட வேண்டும்.
அரசாணை பெறும் வரை நாங்கள் டிபிஐ வளாகத்தில் குடும்பத்துடன் காலவரையற்ற உயிர் துறக்கும் உண்ணாவிரத போராட்டத்தை தொடருவோம். இதில் என்ன இடைஞ்சல்கள் வந்தாலும் உயிரே போனாலும் விடமாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த போராட்டத்தில் அதிக அளவில் பெண்கள் தங்கள் கணவன் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்ட ஆசிரியைகளையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது. 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post