ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் மீது 2 மாதங்களில் நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி

மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள மாநிலக் குழுவின் பரிந்துரைகளை இரண்டு மாதங்களுக்குள் பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார். தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றும் பல்வேறு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசில் பணியாற்றும் 15 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் 7 }ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செப்டம்பருக்குள் வழங்க வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொழில் வரி ரத்து செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம்.

இடைக்கால நிவாரணத்தைப் பொருத்த அளவில் அரசு அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்வதாக முதல்வர் தெரிவித்தார். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைப் பொருத்தவரை, அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், அதன் அறிக்கையைப் பெற்ற பிறகு, அந்தத் திட்டத்தை ரத்து செய்வதற்கான வழிமுறைகளை அரசு ஆராயும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். மத்திய அரசின் 7 }வது ஊதியக் குழு பரிந்துரைகளை ஆராய மாநிலத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை செப்டம்பருக்குள் பெற்று அமல்படுத்துவதாகவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுபவர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்கள் என அனைத்து வகைப் பணியாளர்களையும் ஊதியக்குழுவுக்கு உட்படுத்தி, அதன் அடிப்படையில் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார் என அவர்கள் தெரிவித்தனர்.