Title of the document


நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி
போட்டித் தேர்வு டிப்ஸ்


அரசுப் பணிகளுக்கான தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளில் பொதுத் தமிழ் வினாக்களை எதிர்கொள்வதற்கான குறிப்பு களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதில் தமிழ்ச் சான்றோர்கள், ஆன்மிகப் பெரியோர்களின் வாழ்க்கைக் குறிப்பு, அவர்கள் எழுதிய நூல்கள், அவர்களுக்கு வழங்கப்பெற்ற சிறப்புப் பெயர்கள் ஆகியவற்றைச் சார்ந்து பல தகவல்களைத் தெரிந்துகொண்டால் சுலபமாக விடையளிக்கலாம். அதன் தொடர்ச்சியாக மேலும் சிலரைப் பற்றி இப்போது பார்ப்போம்.

பன்னிரு திருமுறையில் பத்தாவது திருமுறையாகத் திகழும் நூலான திருமந்திரத்தை எழுதியவர் திருமூலர். இவர் பெருஞ்சித்தர் நந்தி தேவரின் மாணவராவார். திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை உடையது.

ஒவ்வொரு தந்திரமும் பல அதிகாரங்களைக் கொண்டது. இதில் மொத்தம் 3000 பாடல்கள் உள்ளன. நாயன்மார்களில் காலத்தால் முற்பட்டவர் திருமூலர். திருவாவடுதுறை கோயிலில் உள்ள அரசமரத்தடியில் 3000 ஆண்டுகள் யோகத்தில் அமர்ந்திருந்தார் என்றும், ஆண்டுக்கு ஒருமுறை விழித்து ஒவ்வொரு மந்திரமாக 3000 மந்திரங்களை அருளினார் என்றும் கூறுவர்.

திருமந்திரமே முதல் மந்திரநூல் ஆகும். பிற்கால சைவ சித்தாந்த சாத்திர நூல்களுக்கு வேராக விளங்குவது திருமந்திரம்.

'ஒன்றே குலம் ஒருவனே தேவனும்
'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'
'ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்'
'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்'
- போன்றவை திருமூலரால் கூறப்படும் உண்மைகள்.

அடுத்து காரைக்கால் அம்மையார் பற்றி பார்ப்போம். இவர் புனிதவதியார் என்ற இயற்பெயர் கொண்டவர். புனிதவதியார் பிறந்த ஊர் காரைக்கால் என்பதால் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்பட்டார். இவரின் கணவர் பெயர் பரமதத்தன்.

மனைவியின் தெய்வீகத்தன்மை அறிந்து, பரமதத்தன் மனைவியை விட்டு விலகி வாழ்ந்து வந்தார். இதனால் காரைக்கால் அம்மையார் இறைவனை வேண்டி பேய் உருவம் பெற்றார். இவர் அற்புதத் திருவந்தாதி, திரு இரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் ஆகிய நூல்களைப் பாடியுள்ளார். இவை பதினோராம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளன.

பன்னிரு ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வார் மற்றும் ஆண்டாள் பற்றி மட்டுமே பாடப் பகுதியில் உள்ளது. எனவே, குலசேகர ஆழ்வார் பற்றி முதலில் பார்த்துவிடுவோம். திருவஞ்சிக்களத்தில் மாசித் திங்கள் புனர்பூச நட்சத்திரத்தில் மணி அம்சமாகப் பிறந்தவர். அரசாட்சியைத் துறந்துவிட்டு வைணவத் தொண்டு ஆற்றியவர் குலசேகர ஆழ்வார். வடமொழியான சமஸ்கிருதத்தில் புலமை மிக்கவர். தமிழில் பெருமாள் திருமொழியும், வடமொழியில் முகுந்த மாலையும் இயற்றியவர்.

திருமாலிடம் கொண்ட பக்தியால் அவர் எழுந்தருளிய திருத்தலத்தில் (திருப்பதியில்) மீனாகப் பிறக்க விரும்பியவர். அப்படி அவர் விரும்பிய பாடிய பாடல் பொருட்சுவை மிக்கது.

அதற்கு உதாரணமாக, 'ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாரும் செல்வமும் மண்ணரகம் யான் வேண்டாமே
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே'
- என்ற சில வரிகளே உண்மையை உணர்த்தும்.

ஆண்டாள், பெரியாழ்வாரின் நந்தவனத்தில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் தோன்றியவள். கோதை என்பதுதான் இவரது இயற்பெயர். ஆண்டவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் பெயர் பெற்றார். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியும் இவர்தான். திருப்பாலை, நாச்சியார் திருமொழி ஆகியவை இவருடைய நூல்கள்.

'வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரணம் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்'
- என்பது ஆண்டாள் அருளிய பாடல்களில் புகழ்பெற்றது.

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையை இயற்றியவர் மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். இவர் பிறந்த ஊர் சீத்தலை என்பதால் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பட்டார். இவர் கூல வாணிகம் தொழில் செய்துவந்தார்.

'கூலம்' என்பது நெல் முதலான 18 வகை தானியங்களைக் குறிக்கும் பொதுப்பெயர். தண்டமிழ் ஆசான், சாத்தான், நன்னூற்புலவன் என்பதெல்லாம் இவருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் பௌத்த சமயத்தைச் சார்ந்திருந்தார்.

புகழ்மிக்க சீறாப்புராணத்தை எழுதியவர் உமறுப்புலவர். இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர். அபுல் காதி மரைக்காயர் என்ற சீதக்காதி, அபுல் காசிம் மரைக்காயர் ஆகியோர் உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள் ஆவர். சீறாப்புராணம் தவிர 'முதுமொழிமாலை' என்ற நூலையும் இவர் எழுதியிருக்கிறார்.

கி.பி. 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் எட்டயபுரம் குறுநில மன்னரின் அரசவைப் புலவராகவும் விளங்கினார்.இதுவரை பொதுத் தமிழுக்கான வினாக்களுக்கு படிக்க வேண்டிய பாடங்கள், கேள்விகள் கேட்கப்படும் விதங்களைப் பார்த்தோம் அடுத்த இதழில் பொது அறிவுப் பகுதிக்கான விளக்கங்களைப் பார்ப்போம். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான மாதிரி வினா-விடை அடுத்த பக்கத்தில்...முனைவர் ஆதலையூர் சூரியகுமார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post