தமிழகம் முழுவதும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் 
தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி, 
கற்றல், கற்பித்தல் கருவிகள் வழங்குதல், ஆசிரியர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட
 பல்வேறு பணிகள், அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தின் 
கீழ் செயல்படுத்தப்படுகிறது.கற்பித்தலில் புதிய தொழில்நுட்பத்தை 
புகுத்துதல் எனும் திட்டத்தின் கீழ், நடுநிலைப்பள்ளி மாணவர்கள், எளிமையாக 
அறிவியல் பாடத்தை கற்க, புதிய செயல்பாட்டு முறை அறிமுகம் 
செய்யப்பட்டுள்ளது. உள்ளூரில் கிடைக்கும் வளங்களை கொண்டு, மாணவர்களின் 
புரிதல் திறனுக்கு ஏற்ப, மாதிரிகள் தயாரித்து, கற்பிக்க 
அறிவுறுத்தப்பட்டுள்ளது.                
                 இதை, மாணவர்களுக்கு கற்பிக்க, மாவட்ட கருத்தாளர்களுக்கான 
பயிற்சி கோவை, ராஜவீதி, ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில், நேற்று 
நடந்தது. இதில், 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இவர்களின் உதவியுடன், அந்தந்த 
வட்டாரத்தில் உள்ள, பள்ளி ஆசிரியர்களுக்கு, செயலாக்க திட்டத்தை விளக்கி, 
மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, 
எஸ்.எஸ்.ஏ., திட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் 
கூறுகையில்,"நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் பாட செயலாக்க திட்டம் 
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், காற்றின் விசை, அழுத்தம் மற்றும் 
வேகத்தை, பலுான், ரப்பர் பாட்டில்கள் கொண்டு விளக்கி புரிய வைக்கலாம். 
மேலும், விலங்குகளின் உடலமைப்பு, தாவரங்களின் அமைப்பு ஆகியவற்றை, செய்முறை 
வாயிலாக விளக்க பயிற்சி அளித்துள்ளோம்.
விரைவில், மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி, உள்வாங்கும் திறன் குறித்து, பரிசோதித்து அறியப்படும்," என்றார்.
