தமிழகத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டாலும், தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் இதற்கு உச்சவரம்பு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தியோதியோ அன்னயோஜனா திட்டப் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசி தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதால், தமிழக அரசிற்கு ஆண்டுக்கு சுமார் 1,193 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.