தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: சிறப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1 வரை விண்ணப்பிக்கலாம்பிளஸ் 2 சிறப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் பங்கேற்க ஜூலை 25-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 வரை விண்ணப்பிக்கலாம்.
நிகழ் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையவழிக் கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிலையில், பிளஸ் 2 சிறப்பு உடனடித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்காகவும், ஏற்கெனவே நடைபெற்ற கலந்தாய்வில் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்காகவும் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி விநியோகிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பம் வாங்கிய மையத்திலேயே ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை இணையதள வழியாக ஒற்றைச்சாளர முறையில் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.