Title of the document
கரூர் மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்பாகவும் மலர்கள், கனிகள், காய்கறிகள், மரங்கள் மற்றும் அறிஞர்களின் பெயர்களை சூட்டும் விழா நடைபெற்றது. அதேபோல,ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வு வைத்து ஒரு ஐ.ஏ.எஸ்,ஒரு ஐ,பி.எஸ் மாணவர்களையும் தேர்ந்தெடுத்து அசத்தி இருக்கிறார்கள்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்தான் இத்தகைய வியப்பூட்டும் முயற்சியை செய்திருக்கிறார்கள். மிகவும் பின்தங்கிய கிராமமான இந்த தொட்டியப்பட்டியில் உள்ள இந்த பள்ளி மாணவர்கள் நல்ல அடிப்படை கல்வியை பெற வேண்டும் என்ற உந்துதலில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஸ்பான்ஸர்கள் மூலம் பள்ளிக்கு தேவையான கட்டடங்கள்,கணினிகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறார். அதோடு, பாடங்களை கணினி மற்றும் இணையம் வாயிலாக காட்சிகள் மூலம் நடத்தி மாணவர்களிடம், கல்வி குறித்த புரிதலை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில்தான்,வட்டார கல்வி அலுவலரை அழைத்து வந்து, இப்படி மாணவர்களுக்கு பெயர்சூட்டும் விழாவை விமர்சையாக நடத்தினார். அதோடு,15,000 ரூபாய் மதிப்பிலான வெள்ளை நிற சீருடைகளையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்
பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தியிடம் பேசினோம். "இது மாவடத்தின் கடைகோடி பகுதியில் உள்ள ஊர். இந்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை சிங்கிள் டிஜிட்டில் இருந்தது. நான் இங்கு பணிக்கு வந்ததும், பல்வேறு முயற்சிகள், வளர்ச்சிகளை ஏற்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன். மாணவர்கள் மத்தியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் வேலை பற்றிய விழிப்புணர்வை சிறு வயதிலேயே ஏற்படுத்த தான் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் வருட ஆரம்பத்திலேயே பொது அறிவு சம்மந்தமான கேள்விகளை உள்ளடக்கிய தேர்வை வைக்கிறோம். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் இரண்டு இடங்கள் வரும் மாணவர்களை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்களாக்கி அவர்களுக்கு அப்படி அடையாள அட்டை தருவோம்.
தினமும் அந்த அடையாள அட்டைகளைதான் அந்த மாணவர்கள் அணிந்து வர வேண்டும். கிளாஸை ஒழுங்குபடுத்துவதில் இருந்து பள்ளி வளர்ச்சி விசயத்தில் உரையாடுவது வரை அந்த மாணவர்கள் பங்கெடுப்பார்கள். அதேபோல், மாணவர்களுக்கு மரம், கனி, மலர்களின் பெயர்கள் நினைவில் நிற்க என்ன செய்யலாம்ன்னு யோசிச்சோம். அப்பதான் மாணவர்களின் பெயர்களுக்கு முன்னாடி அந்த பெயர்களை சேர்க்கலாம்ன்னு முடிவு பண்ணி இந்த விழாவை நடத்தினோம். முதலாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்னாடி மலர்களின் பெயர்களை சூட்டினோம்.
இரண்டாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்னாடி கனிகளின் பெயர்களையும், மூன்றாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்னாடி காய்கறிகளின் பெயர்களையும் சேர்த்து சூட்டினோம். அதேபோல், நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் பெயர்களுக்கு முன்னாடி முறையே மரங்களின் பெயர்களையும், அறிவியல் அறிஞர்களின் பெயர்களையும் சூட்டி மகிழ்ந்தோம். இந்த முயற்சிகளை பார்த்துட்டு, கல்வித்துறை அதிகாரிகள், 'நல்ல முயற்சி. புதுமையான முயற்சியும்கூட. இத்தகைய முயற்சிகள் மாணவர்களிடம் நல்ல மாற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும்'ன்னு வாழ்த்தினார்கள். அதோடு,இந்த கல்வியாண்டில் இதுவரை விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கு வந்த இரண்டு மாணவர்களை பாராட்டி பரிசும், சான்றிதழும் வழங்கினோம். எல்லா ஆசிரியர்களும் சேர்ந்துதான் இந்த முயற்சிகளை எடுக்கிறோம்" என்றார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post