School Annual Day Report - ஆண்டு விழா - ஆண்டு அறிக்கை மாதிரி !!
School Annual Day Report - ஆண்டு விழா - ஆண்டு அறிக்கை மாதிரி
நம்ம ஊர் பள்ளியான குப்பத்தேவன் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் 2024-2025 ஆம் கல்வியாண்டின் ஆண்டறிக்கை வாசிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு.
மணலை தோண்ட தோண்ட நீர் சுரப்பது போல எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் அறிவு வளரும் என்பதற்கு முன்னாள் மாணவர்களின் தேர்ச்சியே சாட்சி.
குப்பத்தேவன் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பத்தேவன் கிராமத்தில் 28.01.1959 அன்று தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டு 03.08.1989 அன்று நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வந்த பள்ளி 18.07.2017 அன்று மேலும் தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப் பள்ளியாகவும் தொடக்கப்பள்ளியாகவும் இன்று வரை சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி இனிதே துவங்கியது. பள்ளி
துவங்கும் போதே மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தமிழக முதல்வர் அவர்களின் வாழ்த்து செய்தியோடும் மாணவர்களை வரவேற்று பள்ளி தொடங்கப்பட்டது. எங்கள் பள்ளியில் 48 மாணவர்களும் 57 மாணவிகளும் மொத்தம் 105 மாணவர்கள் தற்போது கல்வி பயின்று வருகின்றனர்.
பாதியில் விட்டுச் செல்லாமல் நல்ல பாதையில் விட்டுச் செல்பவரே நல் ஆசிரியர்..
ஊர்கூடி தேர் இழுப்பது போல இப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் பள்ளி என்னும் தேரை இழுத்து அதிலுள்ள மாணவத் தெய்வங்களுக்கு கல்வி என்னும் ஆராதனையை சிறப்புடன் செய்து வருகின்றோம்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள். அதுபோல எம் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்னும் கல்வி முறையில் கல்வி புகட்டப்படுகிறது.
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
என்னும் குறளுக்கு இணங்க இங்கு பயிலும் மாணவர்கள் சிறந்த முறையில் கற்பதோடு கற்றபடி வாழ்க்கையில் ஒழுக்கம், ஒற்றுமை, கீழ்படிதல் போன்ற நற்பண்புகளை வளர்த்த பெருமை ஆசிரியர்களையே சாரும்.
இக்கல்வியாண்டில் தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடநூல், பாடக்குறிப்பேடு, சீருடை, பயிற்சிநூல் ஆகியவை மூன்று பருவங்களுக்கும் மற்றும் வண்ணக் கிரேயான், காலணி, புத்தகப்பை ஆகியவை உரிய காலத்தில் பெற்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
காலை உணவு திட்டமும் மதிய உணவு திட்டமும் நமது பள்ளியில் சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
புது ஊஞ்சல் இதழ்கள் மற்றும் வாசிப்பு இயக்கப் புத்தகம் மூலம் மாணவர்களின் வாசிப்புத் திறன் மெருகேற்றப்படுகிறது.
இக்கல்வியாண்டில் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு NAS தேர்வும் மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு SLAS TEST ம் பள்ளிக் கல்வி துறையால் நடத்தப்பட்டு மாணவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்பட்டது.
பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் பெறப்பட்டும் உள்ளது.
இக்கல்வி ஆண்டில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கு பள்ளி அளவில் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. நமது பள்ளியில் பயிலும் மாணவிகள் குழு நாட்டுப்புற நடனத்தில் பள்ளி அளவிலும், CRC மைய அளவிலும், சேதுபாவாசத்திரம் ஒன்றிய அளவிலும் முதலாவதாக தேர்வு செய்யப்பட்டு தஞ்சை மாவட்ட அளவில் நடந்த கலைத் திருவிழாவில் கலந்து கொண்டது நமது பள்ளிக்கு பெருமையை வழங்குகிறது.
14/11/2024 அன்று குழந்தைகள் தின விழா அன்று தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளியில் மகிழ் முற்றம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு தலைமைப் பண்பை வளர்க்கவும் மாணவர்களின் அன்றாட செயல்படுகளை கண்காணிக்கவும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்/ பாலை என ஐந்து குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் தினந்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
குப்பத்தேவன் கிராம ஊராட்சியின் மூலமாக நமது பள்ளிக்கு நான்கு துப்புரவு பணியாளர்களை பள்ளியை தூய்மை செய்வதற்கு நியமனம் செய்யப்பட்டு பள்ளி வளாகம் எப்பொழுதும் தூய்மையாக இருந்து எங்கள் பள்ளி தூய்மை பள்ளி என்ற பெருமையை கொண்டு செயல்படுகிறது.
குப்பத்தேவன் கிராம ஊராட்சியில் இவ்வாண்டில் முக்கியமான தினங்களில் நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலந்து கொண்டு பள்ளி சார்பாக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
நமது பள்ளியில் நடைபெறும் கல்வி வளர்ச்சி நாள், சுதந்திர தினம், குடியரசு தினம், பொங்கல் விழா ஆகிய விழாக்களுக்கும் பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி மாணவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கி ஊக்கப்படுத்துவது மிகவும் சிறப்பாக உள்ளது.
இக்கல்வியாண்டில் பள்ளியில் மூன்று கட்டிடங்களுக்கும் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக SIDS என்ற திட்டத்தின் மூலம் பழுது பார்க்கப்பட்டு பள்ளிக் கட்டிடங்கள் முழுவதும் பாலா வேலை மூலம் படங்கள் வரையப்பட்டு மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டுக்கு உதவியாக இருந்து வருகிறது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி KELTRON நிறுவனம் மூலமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்தவும், இனிமையான கற்றலுக்கு உதவும் வகையிலும், மாணவர்கள் இடைநிற்றலின்றி தொடர்ந்து பள்ளிக்கு வருகை தரவும் மூன்றரை லட்சம் ரூபாய் செலவில் திறன்மிகு வகுப்பறை அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகின்றது.
இக்கல்வி ஆண்டில் பள்ளியின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் கணேசபுரம், செம்பியன்மகாதேவிபட்டினம், கட்டுமாவடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஊர்த்தலைவர்கள் மூலம் ரூபாய் 10,000 ம், கட்டுமாவடி தமிழ் வாழ்க நல நண்பர்கள் அறக்கட்டளையின் மூலமாக 3 ஸ்டீல் மேசையும் 3 பிளாஸ்டிக் நாற்காலியும் கட்டுமாவடி வினோத் ஜவுளி ஸ்டோர்ஸ் மூலமாக 10 பிளாஸ்டிக் நாற்காலியும் அப்போதைய பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக பெற்று தந்தது சிறப்புக்குரியது. மேலும் திரு. இருப்பன் அவர்களின் நண்பர்கள் மூலமாக ஸ்டீல் மேஜை ஒன்றும் பிளாஸ்டிக் நாற்காலி 2ம் ஸ்பீக்கர் 2 ம் பள்ளிக்கு வழங்கப்பட்டது. பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் திருமதி யோகா ஸ்ரீ அவர்கள் ரூபாய் 2000ம் வழங்கி உள்ளார் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.
இக்கல்வியாண்டில் 02.08.2024 அன்று பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மீண்டும் 10.08.2024 அன்று ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களின் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. 2022 2024 ஆம் ஆண்டின் பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததால் 2024 2026 ஆம் ஆண்டிற்கான புதிய பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதை தெரிவித்து அவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர் என்பதை கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.
இக்கல்வியாண்டில் ஒவ்வொரு பருவம் முடிந்த பின்னர் மாணவர்களுடைய கற்றல் அடைவுகளை சோதிக்கும் வகையில் பெற்றோர்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டு மாணவர்களின் கற்றல் நிலையை பெற்றோர்களிடமும் கலந்துரையாடி அறிக்கையில் கையொப்பமிட்டு, அறிக்கை பதிவேடாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இப்பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சமத்துவப் பொங்கல் விழாவாக பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வந்திருந்து சிறப்பு செய்துள்ளனர்.
குப்பத்தேவன் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள எழுத படிக்க தெரியாதவர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் மூலமாக 25 நபர்களுக்கு
தன்னார்வலர் திருமதி. சசிகலா அவர்கள் மூலம் எண்ணறிவும் எழுத்தறிவும் கற்பிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களின் மூலமாக 15 வது நிதி ஆதாரத்திட்டத்தின் மூலமாக ஒரு கழிவறை கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இக்கல்வி ஆண்டில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவக் குழு மூலம் தொழுநோய் ஒழிப்பு திட்டம் முகாமும் முதல் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி முகாமும் நடைபெற்றுள்ளது.
மேலும் இவ்வாண்டில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி, தேசிய வாக்காளர் தின உறுதிமொழி, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழி, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உறுதிமொழி/ குழந்தை தொழிலாளர் முறைகளை அகற்றுவதற்கான உறுதிமொழி ஆகிய உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நல்ல ஒத்துழைப்பாடு வரும் கல்வி ஆண்டில் அதிக மாணவர்களை பள்ளியில் சேர்த்து இடைநிற்றலை தவிர்த்து எங்கள் பள்ளியை மிளிரும் சிறந்த பள்ளியாக உயர்த்துவதே நமது நோக்கமும் அவாவும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய பெருமைமிகு கல்வியைப் பெற பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளை நம் பள்ளியில் சேர்த்து பயன்பெறுவீர்!
அரசுப் பள்ளியில் சேர்த்து நற்கல்வி பெறுவோம்!!! வாழ்வை மாற்றுவோம்!!!
உலகை உயர்த்துவோம்!!!
எனக்கூறி ஆண்டறிக்கையை நிறைவு செய்கிறேன்.
நன்றி வணக்கம்...
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment