Title of the document

பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தாவிட்டால் 2026 தேர்தலில் அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள் !!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறிதாவது: சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், திமுக அரசு மீது ஆசிரியர்கள், அரசு ஊழிர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள்.

குறிப்பிட்ட பிரச்சினையில் எதிர்ப்பு தெரிவிப்பதாலேயே கூட்டணி முறிந்துவிடும் என்ற முடிவுக்கு வரத் தேவையில்லை. ஒவ்வொரு பிரச்சினையிலும் எங்களுக்கென தனி நிலைப்பாடு இருக்கிறது. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, எல்லா பிரச்சினையிலும் ஒத்துப்போக வேண்டிய அவசியமில்லை.

வேங்கைவயல் விவகாரத்தில் விசிக மட்டுமின்றி, நாங்களும் அதிருப்தியில் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வன விலங்குகளால் பயிர்கள் அழிக்கப்படும்போது, அதை இயற்கைப் பேரழிவாக கருதி, விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், சாகுபடிப் பகுதிக்குள் விலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொருத்தவரை, ஹெச்.ராஜா உள்ளிட்ட இந்து அமைப்பினர் பேசியவை கண்டனத்துக்குரியவை.

மத நல்லிணத்தைக் காப்பாற்றும் வகையில், அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் வழிபாட்டு உணர்வை, அரசியல் லாபத்துக்காக பாஜக பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post