பெண் ஆசிரியைகள் பதவி உயர்வு உரிமையைப் பறிக்கும் அரசாணை 243! - எழுத்தாளர் மணி கணேசன்
பெண் ஆசிரியைகள் பதவி உயர்வு உரிமையைப் பறிக்கும் அரசாணை 243!
கேழ்வரகில் என்றாவது நெய் ஒழுக வாய்ப்பு இருக்கிறதா? இல்லையே! அதுபோல அண்டப் புளுகு ஆகாசப் புளுகர்களால் சொல்லப்படுபவை அப்பட்டமான வடிகட்டிய அக்மார்க் பொய்கள் ஆகும். இதை நம்புபவன் சுயபுத்தியை உபயோகிக்கவில்லை என்று சொல்ல கேட்டதுண்டு.
அரசாணை 243 ஆல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகவிருக்கும் பெண் ஆசிரியர்கள் குறித்து அழும் பட்டதாரி ஆசிரியர்களின் நிலையானது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது.
முதலில் ஒன்றை அதாவது உண்மையான கள நிலவரத்தை புரிந்து கொள்ளுதல் யாவருக்கும் நலமாகும். பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியைகள் தம் பதவி உயர்வைத் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துறப்பு செய்கிறார்களா என்ன? எவ்வளவு தொலைவு என்றாலும் போகத்தானே செய்கிறார்கள்! அதுபோலவே தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியைகள் பதவி உயர்வில் எங்கு தமக்குரிய இடம் கிடைத்தாலும் விருப்பத்துடன் போகவே விழைவார்கள் என்று சப்பைக்கட்டு கட்டுவதும் கம்பி கட்டுகிற கதைகளை அள்ளி விடுவதும் வாடிக்கையாக உள்ளது வேதனைக்குரியது.
ஒன்றிய அலகில் ஓர் ஒன்றியத்தின் ஒட்டுமொத்த சுற்றளவு என்பது அதிகபட்சமாக நூறு கிலோமீட்டருக்குள் அடங்கி விடும். குறுக்கும் நெடுக்குமாகப் பயணித்தால் அதிகபட்சம் 50 கி.மீ. தாண்டாது. காலம் கடந்து கிடைக்கப்பெறும் பதவி உயர்வு, தம் உடல்நிலை, குடும்ப சூழல், ஒற்றைப் பெற்றோர், ஆதரவற்ற நிலை, வாகனம் ஓட்ட பழகிக் கொள்ளாமை, கருவுறுதல் மற்றும் குழந்தைப்பேறு காரணமாக மருத்துவ காரணங்களால் அதிக தூரம் செல்ல முடியாமை, நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய் பாதிப்புகளிலிருந்து முழுமையாகக் குணமடைய போராடி வரும் மனநிலையில் உள்ளோர், இராணுவத்தினர், திருமணமாகாத இளம்பெண்கள் முதலானோர் பதவி உயர்வு கலந்தாய்வின் பொருட்டு அவ்வப்போது அரசு பல்வேறு சலுகைகளை வழங்கினாலும் கூட ஒன்றியத்திற்குள் சற்று தொலைவில் உரிய போக்குவரத்து வசதிகள் இல்லாத குக்கிராமத்திற்கு மறுப்பேதும் சொல்லாமல் செல்வதற்கு இப்போதும் தயாராக இருப்பதில்லை. குடும்பத்தினரும் நண்பர்களும் இயக்கத்தினரும் நிறைய சுப பொய்களைக் கூறி எதிர்வரும் பணிமாறுதல் கலந்தாய்வில் தக்க இடம் கட்டாயம் கிடைத்துவிடும் என்று மறுபடியும் ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விடும் அவலம் தொடர்வது என்பது கண்கூடு.
இந்த நிலையில், கலர் கலராக மாநில முன்னுரிமையில் பெண் ஆசிரியர் பெருமக்களுக்குக் கிடைக்கப்பெறுவதாக உருட்டப்படும் புதுப்புது புளுகு மூட்டைகளை நினைத்து வருத்தப்பட வேண்டியுள்ளது.
பொதுவாக உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் அமைந்துள்ள கிராமமானது, அதன் சுற்று வட்டார குக்கிராமங்களுக்கு மத்தியில் பெரிய தலைக்கட்டாக இருந்து வருவது எண்ணத்தக்கது. இது நல்ல சாலை வசதியும் போதுமான பேருந்து வசதியும் சிறு உணவகம் உள்ளிட்ட கடைகள் நிரம்பியதாகவும் உள்ளது. பிற்காலத்தில் இங்கிருந்து பல்வேறு வசதிகள் மிக்க, வீட்டிற்கு அண்மையில் உள்ள பணிமாறுதல் பெறும் புதுப் பள்ளியின் அமைவிடமும் மேற்சுட்டப் பெற்ற வசதிகளுக்குச் சற்றும் குறையாததாகவே அமைந்திருக்கும் என்பதில் பிழையும் மிகையும் இருக்க முடியாது.
அதேவேளையில், தொடக்கக்கல்வித் துறையில் அமைந்துள்ள குக்கிராமப்புற பள்ளிகள் நிலை குறித்து உங்கள் எண்ணவோட்டத்திற்கு விட்டு விடத் தோன்றுகிறது. சந்தர்ப்ப சூழல் காரணமாக ஒரு பேயிடம்(அடிப்படை வசதிகள் அற்ற பள்ளி) தற்காலிகமாக அகப்பட்டு வேறுவழியின்றிப் பிழைப்பை ஓட்டும் ஒரு பெண் ஆசிரியர் மூதுரிமை அல்லது நிர்வாக மாறுதல் வரம் வாங்கிச் சென்று மற்றுமொரு பிசாசிடம் (ஓரளவிற்கு வசதிகள் உள்ள பள்ளி) தான் குப்பைக்கொட்ட வேண்டியிருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும். இவையனைத்தும் ஒன்றிய அலகிற்குள் நிகழும் நிகழ்வாகும்.
ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்கும் கொக்கு போல ஒன்றியம்தோறும் தற்போதைய புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமக்குக் கிடைக்கும் பதவி உயர்வைத் தற்காலிக துறப்பு செய்யும் பெண் ஆசிரியைகள் 10 முதல் 20 விழுக்காட்டினர் உள்ளனர். மாநில முன்னுரிமையால் இது தலைகீழாக மாறும். அதாவது, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி ஒன்றியங்கள் ஆகியவற்றில் உள்ள பொது பணிமாறுதலில் கூட எவராலும் தீண்டப்பெறாத, பத்துக்கு ஒன்பது பொருத்தங்கள் நிரம்பிய, அடிப்படை வசதிகளுக்கு ஒரு குறையும் இல்லாத, சகல சௌபாக்கியங்களும் பொங்கி வழியும், அண்டப் புளுகு மற்றும் ஆகாசப் புளுகுணிகள் திட்டமிட்டே பரப்புரை செய்யும் திரிசங்கு சொர்க்கபுரிக்குப் படையெடுப்போர் விழுக்காடு 10 - 20 ஆகவே அமையும்.
உண்மையில் பெண் சக்தியானது இந்த குறுகிய எண்ணம் கொண்ட மனித ஆக்கப் பேரிடர் விளைவிக்கும் கருப்பு அரசாணையால் புதியதொரு மாற்றத்தை எதிர்நோக்கி வீறுநடை போடுவது என்பது பெரும் பின்னடைவைச் சந்திக்கும். நியாயமாகப் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய அவ்வக்கால பதவி உயர்வு உரிமைகள் பறிக்கப்பட்டு வயதிலும் முன்னுரிமையில் மிகவும் இளையவரும் எப்படியாவது பதவி உயர்வில் சென்று விட வேண்டும் என்கிற அடங்கா வேட்கையிலும் திமிறி அலைகிற ஆண்கள் கூட்டம் பல நூற்றாண்டுக் கால அடிமைப்பட்டு கிடந்த பெண்கள் கனவைக் கொன்று புதைத்துக் கொக்கரிக்கும் கொடும் இருண்ட காலம் ஒன்று மறுபடியும் உருவாகக்கூடுமோ என்கிற அச்சவுணர்வு இயல்பாகப் பொதுச் சமூகத்தில் எழுவதை மறுப்பதற்கில்லை.
இன்றைய சூழ்நிலையில் பதவி உயர்வு என்பது கடந்த காலங்களில் இருந்தது போன்ற கூடுதல் பணப்பலன்கள் நிறைந்த ஒன்றாக இல்லை. ஏற்கனவே, போராடிப் பெற்று வரும் சிறப்பு ஊதியம், சென்னை முதலான முதல் தர வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி போன்றவற்றை ஒரேயடியாக இழந்து அதிகபட்ச ஊதிய இழப்பை எதிர்கொள்ள இது அதிகம் வழிவகுக்கும்.
தவிர, தலைமையாசிரியர் பதவி என்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொரிந்து கொள்வதற்கு ஈடான ஒன்றாக ஆக்கப்பட்டு விட்டது. வாயில் கதவைப் பூட்டுதல் உள்ளிட்ட புழுக்கை வேலையிலிருந்து தொடங்கி தலைமையிடம் நோக்கி ஓடிச் சென்று சுமை தூக்கும் கூலியாக தவணை முறையில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தலையில் தூக்கிச் சுமக்கும் பெரிய வேலைகள் வரை அலைய வேண்டியிருக்கிறது. பள்ளியில் மற்றும் பள்ளிக்கு வெளியில் நிகழும் நல்லது கெட்டது அனைத்திற்கும் கட்டாயம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வேறு.
இதற்கிடையில் சக ஆசிரியர்களிடம் வீண் பொல்லாப்பை சம்பாதிக்காமலும் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு மறுப்புச் சொல்லாமலும் நடைபிணமாக இருந்து தொலைப்பது என்பது கொடுமையானது. மேலும், பள்ளி மேலாண்மைக் குழுவை மாதந்தோறும் கட்டி இழுப்பதும் இல்லம் தேடிக் கல்விக்கு மாணவர்களை தினசரி விரட்டுவதும் ஏணி போட்டு ஏறி மொட்டை மாடியில் வளர்ந்துவரும் மரச்செடிகளைப் பிடுங்கி எறிவதற்கு தெம்பை வளர்ப்பதும் காலை உணவில் கிடக்கும் கறிவேப்பிலை இலைக்காம்பைக் கண்டு தூசித்துரும்போ என்று உயிர்நாடி அடங்கித் தவிப்பதும் வகுப்பறையை உற்றுநோக்கிச் செயலியில் பதிவிட தலைமையாசிரியர் கூட்டத்தில் தொடர்ந்து அறிவுறுத்துவதை நடைமுறைப்படுத்த முடியாமல் அல்லாடுவதும் எமிஸிடம் அன்றாடம் மல்லுக்கு நின்று புலம்புவதும் என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இருப்பதையும் இழந்து வீண் அலைச்சலையும் சுமந்து பல பொல்லாத நபர்களின் பொய்யான போலியான பகட்டான வெற்று வார்த்தைகளை நம்பி பணியில் எதிர்நோக்கும் மன உளைச்சல்கள் எதற்கு என்று தேங்கிவிடும் நோக்கும் போக்கும் இனி பெண் ஆசிரியைகள் மத்தியில் மிகும்.
பெண்கள் பணி செய்ய பொதுவெளிக்கு வந்து விட்டனர். அப்படியிருக்க பதவி உயர்வு எங்கு கிடைத்தாலும் போக வேண்டியது தானே? இஃது ஆணாதிக்க சிந்தனையின் அழுகல் போக்கு அல்லவா? நாங்கள் பெண் ஆசிரியைகளுக்கு எல்லாவிதமான வாய்ப்புகளும் வழங்கி விட்டோம். அவர்கள் போக மறுப்பதற்கு நாங்கள் என்ன செய்வோம்? இது சுருக்குக் கயிற்றையும் கழுத்தில் மாட்டிவிட்டு அவர்கள் ஏறி நிற்கச் செய்த செல்லரித்த நாற்காலியையும் எட்டிக் காலால் உதைத்து விட்டு வேடிக்கைப் பார்ப்பதற்கு சமம்.
மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் என எந்தவொரு சேதாரமும் இல்லாமல் பெண் ஆசிரியைகள் செவ்வனே பணி செய்வதற்கு இந்த அரசாணை தெய்வ வரம் மிக்கது என்று தூண்டில் வார்த்தைகளைப் பாகுபாடின்றி பலரும் பிதற்றுவதைக் காண முடிகிறது. தற்போது பணியில் உள்ள 1% ஆசிரியைகளுக்கு மட்டுமே இது பொருந்தக்கூடியதாக அமையும். அதுவும் முதலாவதாக நடத்தப்படும் பொது கலந்தாய்வு பணி மாறுதலில் அதன்பின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியலில் மூத்தோர் பலரும் எடுக்காமல் கைவிட்ட நிலையில் தமக்கான முறை வரும் போது எடுக்கப்படும் இடங்கள் அனைத்தும் சபிக்கப்பட்ட இடங்களாகத் தான் இருக்க முடியும்! இந்த கொடுமைக்கு 99% பெண் ஆசிரியைகளைப் பலிபீடத்தில் ஏற்றுவது ஒருபோதும் சரியாகாது.
மொத்தத்தில் அவரவர் காலுக்கு ஏற்ற காலணிகள் அணிந்து செல்லும் தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கத்தை மாற்றிவிட்டு ஒரு தரப்பினர் மட்டுமே முழுப் பலனடையும் (அதுவும் சந்தேகம் தான்) அரசியல் பிரித்தாளும் சூழ்ச்சியால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட யாருக்கும் எந்த வகையிலும் பொருந்தாத காலணிக்குப் பொருந்தும் வகையில் நல்ல நிலையில் உள்ள பாதங்கள் அனைத்தையும் வலிய ஒழுங்குபடுத்துவதாக நினைத்துக் கொண்டு சிதைத்துக் கொண்டிருப்பது என்பது உச்சகட்ட அவலம் ஆகும்.
இங்கு பலரும் பெண் ஆசிரியைகளின் குரலாக, தம் குரலை உயர்த்திப் பிடித்துத் தூக்கிக்கொண்டு நன்றி பாராட்டுவதும் புளகாங்கிதம் அடைந்தபடி மெய்சிலிர்க்க பேசுவதும் என்பது நல்ல அறமாகாது. இந்த அரசாணை குறித்து அவர்கள் பல்வேறு சாதக, பாதகங்களைக் கருத்தில் கொண்டு நேர்மையாக விடையளிக்கட்டும்.
உங்களில் பலருக்கும் இந்த எண்ணம் தோன்றக்கூடும்! வாராது வந்த மாமணி போல் கிடைத்திட்ட இந்த அரசாணையால் வயதிலும் அனுபவத்திலும் இளையோர் பலருக்கும் பதவி உயர்வில் சம வாய்ப்பு கிடைக்கப்பெறும் என்று. அதற்காக முடியாத வயதிலும் தம் கல்வித் தகுதிகளை உயர்த்திக்கொண்டு இளையோருக்கு எந்த விதத்திலும் குறையாமல் ஈடுகொடுத்து விளங்கும் மூத்தோர் அனைவரையும் உயிருடன் கழுவிலா ஏற்ற முடியும்? அவரவர் இலக்குகளும் வெற்றிகளும் அவரவர் உயரத்தால் இயல்பான முறையில் இருக்க வேண்டுமே ஒழிய தமக்கு முன்னே இருப்பவர்களைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு அவர்களின் குரல்வளையில் ஏறி மிதித்து நின்று கொண்டு கூத்தாடுவதில் இல்லை.
இது பழுத்த மட்டையைப் பார்த்து குருத்து மட்டை ஆர்ப்பரிப்பது போலுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பதவி உயர்வு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கி வழிகாட்டியுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்பதற்கு ஒருவேளை பச்சைக்கொடி காட்டி விட்டால் ஒரு பிரிவினர் முன்னெடுக்கும் நன்றிக் குளியலால் திளைத்துக் கிடக்கும் அரசும் அதற்கு செவிமடுத்து விட்டால் இப்போது கொக்கரிக்கும் இவர்களின் நிலை என்னவாகும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
எந்தவோர் ஆளும் அரசிற்கும் இருவேறு முகங்கள் எப்போதும் உண்டு. எதிர்க் கட்சியாக இருக்கும் வரை கொஞ்சிக் குழைவார்கள். அவர்களே ஆள்பவராக ஆட்சிக் கட்டிலில் எப்படியோ ஏறி அமர்ந்து விட்டால் குதறித் தள்ளி விடுவார்கள். இந்த உலக நடப்பைப் புரிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. இந்த திடீர் ஒரு வழிப் பதவி உயர்வால் ஏனைய வாழ்வாதார கோரிக்கைகள் அனைத்தும் நீர்த்துப் போய் விட்டதா என்ன? அவற்றை ஒருங்கிணைந்து வென்றெடுக்க அவர்களின் தோழமையும் உதவியும் ஒத்துழைப்பும் ஆதரவும் இனி ஒருக்காலும் தேவையே இல்லை என்று உறுதியாகத் தான் இவர்களால் சொல்ல முடியுமா?
அண்மைக்காலச் சூழலில் அனைத்தும் கணினி மற்றும் இணையவழி மயம் என்றாகிவிட்டது. மேலும், செயற்கை நுண்ணறிவு நுழைவு காரணமாக ஆளில்லா வகுப்பறைகளை நோக்கி பீடு நடை போட இருக்கும் கல்வியானது இன்னும் இருபதாண்டு காலம் பணிக்காலம் வாய்த்திருக்கிற இளைய ஆசிரியர் சமுதாயத்தை என்ன செய்ய காத்திருக்கிறது என்று பயப்பட வைக்கிறது. இந்த தொலைநோக்குப் பார்வை அனைவருக்கும் அவசியம். பதவி உயர்வில் நியாயமாகக் கிடைக்க வேண்டிய எதிர்தரப்பை நிரந்தரமாக வனவாசம் இருக்கச் சொல்லி அவர்களிடம் ஒருவித நிர்ப்பந்தம் விளைவித்து தமக்கே தமக்கேயான துரியோதனப் போக்கால் யாருக்கும் ஒரு பயனுமில்லை. ஓர் ஒழுங்குடனும் கட்டுக்கோப்புடனும் பன்னெடுங்காலமாக வரிசைக்கிரமமாகப் போய்க் கொண்டிருக்கும் வரிசைக்குள் தூக்கிப் போடப்பட்ட கேடு விளைவிக்கும் கெட்ட பாம்பாகத்தான் இந்த அரசாணையை உற்றுநோக்க வேண்டியிருக்கிறது.
அட! ஓராயிரம் என்ன? கோடான கோடி நல்லது இந்த அரசாணையால் பலன்கள் கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது என்று வாயொழுக பிதற்றுவதால் என்ன பயன்? ஏனெனில், எப்படி உற்றுநோக்கிப் பார்த்தாலும் அழகிய சயனைடு குப்பி ஒருபோதும் கோரப் பசியைத் தீர்க்காது; அதுபோல ஆட்கொல்லி அணுகுண்டால் ஒருநாளும் அமைதி கிட்டாது.
எழுத்தாளர் மணி கணேசன்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment