TET தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு ஆசிரியர் வேலை - அரசுக்கு அண்ணாமலை 48 மணி நேரம் அவகாசம்
''ஆசிரியர் தகுதி தேர்வு முடித்து போராடும் பட்டதாரிகளின் கோரிக்கையை, 48 மணி நேரத்தில் நிறைவேற்றாவிட்டால், பட்டதாரிகளுடன் பா.ஜ.வும் இணையும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள், தங்களுக்கு போட்டி தேர்வு இன்றி அரசு வேலை கோரி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று, நான்காம் நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, பட்டதாரிகளை சந்தித்து பேசினார்.
அதன்பின், அவர் அளித்த பேட்டி:
தகுதி தேர்வு முடித்த பட்டதாரிகளின் போராட்டம் புதிதல்ல. ஒவ்வொரு முறை போராடும்போதும், அரசு அவர்களிடம் பேச்சு நடத்தி முடித்துக் கொள்கிறது. இந்த போராட்டம் நியாயமானது.
இவர்களில், 24 ஆயிரம் பேர் ஏற்கனவே வேலைவாய்ப்பு பெற்று விட்டனர். அதன்பிறகு, 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்பட்ட பின், 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'கடந்த 2013ம் ஆண்டில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த அனைவருக்கும், போட்டி தேர்வு இன்றி, அரசு பள்ளிகளில் பணி நியமனம் வழங்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையின், 177வது அம்சமாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பின், இந்த வாக்குறுதியை தி.மு.க., நிறைவேற்றவில்லை. எனவே, அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம். தமிழக அரசுக்கு, இன்று முதல், 48 மணி நேரம் அவகாசம் அளிக்கிறோம். உரிய பேச்சு நடத்தி, சுமூக முடிவெடுத்து, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இல்லாவிட்டால், வரும், 15ம் தேதி பா.ஜ.,வும் போராட்டத்தில் இணையும். நானும் களத்துக்கு வருவேன். போராட்டம் பிரமாண்டமாக நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
வி.சி., தலைவர் திருமாவளவனும் போராட்ட களத்துக்கு வந்து, பட்டதாரிகளின் கோரிக்கையை கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, போராட்டம் நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்க மாநில தலைவர் கபிலன் சின்னசாமி தலைமையிலான பிரதிநிதிகள், நேற்று முதல்வரின் முதன்மை செயலர் உதய சந்திரன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா ஆகியோரை சந்தித்து, மனு அளித்தனர்.
அவர்கள் கோரிக்கை குறித்து, உரிய ஆய்வு செய்வதாக தெரிவித்துஉள்ளனர்.
Post a Comment