ஆசிரியர்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்! தமிழ்நாட்டின் மிகப்பெரும் அவமானம் - ஆசிரியர் கூட்டணி கடும் கண்டனம்!
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
மாநில மையம் நாள்:21.03.2023
++++++++++++++++++
கடும் கண்டனம்!
++++++++++++++++++
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற ஆசிரியர்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்!
தமிழ்நாட்டின் மிகப்பெரும் அவமானம்!
++++++++++++++++++
தூத்துக்குடி மாவட்டம்,புதூர் ஒன்றியம்,கீழ நம்பிபுரம் கிராமத்தில் உள்ள இந்து ஆரம்பப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் திருமதி. குருவம்மாள்,திரு. பரத் ஆகியோர் மீது இன்று(21.03.2023) அப்பள்ளியில் இரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவனின் பெற்றோர் நடத்திய கண்மூடித்தனமான, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரும் கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
"எழுத்தறிவித்தவன் இறைவன்" என்று ஆசிரியர்கள் மதிக்கப்பட்ட காலம் போய், எழுத்தறிவிக்கும் ஆசிரியர்களை கேட்பதற்கே நாதியில்லாமல் விரட்டி விரட்டி அடிக்கும் கேவலமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது காவல்துறை மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தனது குழந்தையை ஆசிரியர் அடித்ததாகச் சொல்லும் பெற்றோர் ஒருவேளை அது உண்மையாக இருந்தாலும்,அதை முறையாகப் புகார் தெரிவிக்க வேண்டிய இடத்தில் தான் தெரிவித்திருக்க வேண்டும்.அதை விடுத்து ஆலயம் போன்ற கல்விக்கூடத்தில் நுழைந்து ஆசிரியர்கள் கூக்குரலிட தடுப்பதற்கே நாதியில்லாமல் அடித்து உதைத்த கோரக்காட்சி சமூக ஊடகங்களில் பரவி தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்பு ஆசிரியர்கள் இதேபோன்று பெற்றோர்களால், மாணவர்களால், சமூக விரோதிகளால் தாக்கப்பட்ட நிகழ்வுகளில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாததும் இதுபோன்ற காட்டுமிராண்டி செயல்கள் தொடர்வதற்கு காரணமாக அமைந்துவிட்டது. மருத்துவம்,கல்வி ஆகிய இரண்டும் சேவைப் பணிகளாகும். மருத்துவர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் உள்ளதைப் போல், ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு இத்தருணத்தில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
நடந்து முடிந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.தவறும் பட்சத்தில் ஆசிரியர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக ஒத்த கருத்துடைய அமைப்புகளைத் திரட்டி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும்.
++++++++++++++++++
இப்படிக்கு
ச.மயில்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
Post a Comment