Title of the document
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் ஜனவரியிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கர்நாடகம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் உள்பட பல்வேறு மாநில அரசுகள் தங்களது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும் என தமிழக அரசு ஊழியர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், ஜனவரி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், “திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளோம். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தியதும், பதவி உயர்வு பாதிக்கப்பட்டிருந்தால் சரிசெய்யப்படும் எனவும் அறிவித்தது திமுக ஆட்சிக்காலத்தில்தான்.

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதில் நான் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளேன். அரசுக்கு கடும் நிதி நெருக்கடி இருப்பினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என அறிவித்தோம். அதன்படி, 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post