பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்படும் !
தமிழகத்தில், பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி, நான்கு கோடி, 'ஜிங்க் மற்றும் விட்டமின்' மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளன,'' என, தமிழக மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத் கூறினார்.
தமிழகத்தில், கொரோனா தொற்று காரணமாக, 2020 மார்ச், 25 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது, மாநிலம் முழுதும் தொற்று குறைந்து வருவதால், 10 மற்றும் 12 மாணவர்களுக்கான வகுப்புகள், வரும், 19ம் தேதி முதல் துவங்க உள்ளன. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், மாணவர்களுக்கு, மாத்திரைகள் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத் கூறியதாவது:பள்ளி மாணவர்களிடையே, நோய் எதிர்ப்பு சக்தியை, ஆரம்பத்திலேயே அதிகரித்து, தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 'ஜிங்க்' மற்றும் அனைத்து வகையான, 'விட்டமின்' மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, நான்கு கோடி மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இவை, அனைத்து மாணவர்களுக்கும், உரிய வழிகாட்டுதல் பின்பற்றி வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
إرسال تعليق