Title of the document


NEET விடைத்தாளில் முறைகேடு?




நீட் தேர்வு விடைத்தாள்களில் முறைகேடுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை விசாரித்து, அறிக்கை அளிக்க, தேசிய தேர்வு ஏஜன்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் தாக்கல் செய்த மனு: மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு எழுதினேன். என் விடைத்தாளை, அக்., 5ல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். 594 மதிப்பெண் பெற்றிருப்பதாக காட்டியது. அக்., 16 வரை, இதே நிலை தான் இருந்தது. 17ம் தேதி விடைத்தாளில் மாற்றம் ஏற்பட்டு, மதிப்பெண், 248 என, காட்டியது.முதலில் அறிவிக்கப்பட்டபடி, 594 மதிப்பெண் பெற்றதாக உத்தரவிட வேண்டும்.

கவுன்சிலிங்கில் பங்கேற்க, என்னை அனுமதிக்கும்படியும், மருத்துவப் படிப்பில் இடம் வழங்கவும், உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.ரவி ஆஜரானார். நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு ஏஜன்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஒரே ஒரு விடைத்தாள் தான் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும், 248 மதிப்பெண் பெற்றிருப்பதாகவும்கூறப்பட்டுள்ளது

இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:கூகுள் கணக்கில் இருந்து பெறப்பட்ட தகவல்களை, மனுதாரர் சமர்பித்துள்ளார். இரண்டு வகையான விடைத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரிகிறது. அக்., 5ல் பதிவேற்றம் செய்யப்பட்ட விடைத்தாள், 16ம் தேதி வரை இருந்துள்ளது; அதில், 594 மதிப்பெண் என, காட்டப்பட்டுள்ளது.

இந்த தகவலில், மனுதாரர் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. ஏனென்றால், கூகுள் கணக்கு, அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அக்., 17 முதல், மதிப்பெண்ணை, 248 என காட்டி, விடைத்தாள் எப்படி மாற்றப்பட்டது என்பது தெரியவில்லை.விடைத்தாளில் இப்படி மாற்றம் செய்ய முடியுமா; மின்னணு முறையில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளது என்றால், உண்மையிலேயே இது ஆபத்து தான். அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

இந்த வழக்கு ஆச்சரியம் அளிக்கிறது.முறைகேடுக்கு வாய்ப்பு இருக்கிறது என்றால், 'ஆன்லைன்' முறையில் எதுவும் நடக்கலாம். அரிதான வாய்ப்பு இருந்தால் கூட, தேர்வு நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படும். டாக்டர்களின் எதிர்காலம் என்பதால், இந்த விஷயத்தை தீவிரமாக கருதுகிறேன்.எனவே, மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட ஆவணங்களை முழுமை யாக பரிசீலித்து, விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு ஏஜன்சிக்கு உத்தரவிடப்படுகிறது. இரண்டு விதமான விடைத்தாள் எப்படி பதிவேற்றம் செய்யப்பட்டது; அவை இரண்டும் வெவ்வேறு விதமாக எப்படி உள்ளது என்பதை விளக்க வேண்டும்.


கவுன்சிலிங்கில் பங்கேற்க, மனுதாரரை அனுமதிக்க வேண்டும். அவருக்கு, 'சீட்' கிடைத்தால், அதை இறுதி செய்யாமல், வழக்கின் இறுதி உத்தரவுக்கு காத்திருக்க வேண்டும். அறிக்கையை சீலிட்ட உறையில், தேசிய தேர்வு ஏஜன்சி தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, வரும், 23க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post